ரூ.1,000 உரிமைத்தொகைக்கு அப்ளை பண்ணிட்டீங்களா..? பணம் வரப்போகுது..? உதயநிதி ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்..!!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு தொகை அனுப்புவது பற்றி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியுள்ள பெண்களுக்கு ரூ.1000 நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும், பலர் தங்களுக்கு தகுதி இருந்தும் ரூ.1,000 கிடைக்காததாக கூறி வந்த நிலையில், மீண்டும் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. ஆனால், இதுவரை இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படவில்லை.
இந்நிலையில் தான், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுகுறித்து வேடசந்தூர் தொகுதி திமுக உறுப்பினர் எஸ்.காந்திராஜன், கொமதேக உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரனும் ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய துணை முதலமைச்சர் முக.ஸ்டாலின், “மகளிர் உரிமைத் தொகைக்கு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 1 கோடியே 63 லட்சத்து 57 ஆயிரத்து 195 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதில், முதற்கட்டமாக 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 198 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் 1 கோடியே 14 லட்சத்து 65,525 மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது. தற்போது, இத்திட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு எவ்வளவு பேருக்கு வழங்க முடியுமோ, அனைவருக்கும் விடுபடாமல் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. நாங்கள் ஆய்வுக்கு செல்லும்போது, உரிமைத்தொகை வேண்டி மகளிர் விண்ணப்பம் அளிக்கின்றனர்.
அதுபற்றி, விவரங்களை சேகரித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இதுவரை பயன்பெறாத மகளிருக்கு தகுதியின் அடிப்படையில் நிச்சயமாக உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த முறை விண்ணப்பிக்க முடியாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கவும், திட்டத்தின் தகுதிகளை பூர்த்தி செய்யும் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கவும் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.