அரசியலும்.. டார்க் காமெடியும்.. எதிர்பார்ப்பை எகிற செய்த சூது கவ்வும் 2..!! கலெக்ஷனை அள்ளுமா?
2013-ஆம் ஆண்டு, நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குனர் நலன் குமரசாமி இயக்கத்தில் வெளியானது "சூது கவ்வும்" திரைப்படம். டார்க் காமெடி பாணியில் உருவான இந்த படம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இந்த படத்தில் அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி, பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் உட்பட பலர் நடித்து இருந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் இப்போது உருவாகி இருக்கிறது.
திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார், தங்கம் சினிமாஸ் எஸ்.தங்கராஜ் இணைந்து தயாரித்துள்ள இந்த இரண்டாம் பாகத்தை அறிமுக இயக்குனர் எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கியுள்ளார். நடிகர் மிர்ச்சி சிவா, நடித்துள்ள இந்த படத்திற்கு 'சூது கவ்வும் 2 – நாடும் நாட்டு மக்களும்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
வாகை சந்திரசேகர், எம்.எஸ்.பாஸ்கர், ஹரீஷா, ராதாரவி, ரமேஷ் திலக், அருள்தாஸ் உட்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் டிச.13 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. ட்ரெய்லரில் முதல் பாகத்தில் வந்த விஜய் சேதுபதியின் கேங் லீடர் இடத்தில் மிர்ச்சி சிவா இருக்கிறார்.
சூது கவ்வும் படத்தின் பலமே அதன் டார்க் காமெடியும் அரசியல் நையாண்டிகளும் தான். இப்படத்தின் முதல் பாகம் வெளியான போது பெரும் வரவேற்பை பெற்றன. சரியான திரைக்கதையும், முந்தைய பாகத்தை போல நச் வசனங்களும் அமைந்தால் இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டை கிளப்புவது உறுதி. இந்த சூது கவ்வும் 2 படம் டிச.13 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.