"டிசைன் டிசைனா ஆட்டைய போடுறீங்களே."! பெண்ணிடம் நூதன முறையில் 3 லட்ச ரூபாய் திருட்டு.! ஆட்டோ டிரைவர் அதிரடி கைது.!
சென்னையைச் சேர்ந்த மூதாட்டியை ஏமாற்றி மூன்று லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை வியாசர்பாடி அடுத்துள்ள சாமியார் தோட்டம் 1-வது தெருவில் வசித்து வருபவர் இன்பச் செல்வி(53). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான ராஜேஷ் என்பவரின் ஆட்டோவில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ராஜேஷ் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார் இன்பச் செல்வி. அப்போது ஏடிஎம் கார்டில் இருந்து பணம் எடுப்பதற்காக இறங்கி இருக்கிறார்.
ஏடிஎம் இயந்திரத்தில் கார்டை போட்டும் பணம் வரவில்லை. இது தொடர்பாக ராஜேஷிடம் கூறிய போது இந்தப் பிரச்சினையை செல்போனின் மூலம் சரி செய்யலாம் எனக் கூறி இன்பச் செல்வியின் செல்போனை வாங்கி அதில் வங்கியின் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ததாக கூறப்படுகிறது. இதன் பிறகு சில நாட்கள் கழித்து இன்பச் செல்வி தனது வங்கி கணக்கை சரிபார்த்த போது அதில் 3 லட்ச ரூபாய் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவர் காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். அவரது புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்தபோது இன்பச் செல்வியின் வங்கி கணக்கிலிருந்து ஆட்டோ ஓட்டுனர் ராஜேஷின் வங்கி கணக்கிற்கு 3 லட்ச ரூபாய் பல தவணைகளாக மாற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அந்தப் பெண்மணியிடம் மோசடி செய்து கிடைத்த பணத்தில் புதிய ஆட்டோ மற்றும் தங்கம் வாங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.