பொது மக்களின் மனுக்களுக்கு 3 நாளில் ஒப்புதல்...! அரசு அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அதிரடி உத்தரவு...!
பொது மக்களின் மனுக்களுக்கு 3 நாளில் ஒப்புதல் கொடுத்து, ஒரு மாதத்தில் தீர்வு காணப்பட வேண்டும் என தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்கள் தங்களின் குறைகளை முதலமைச்சரின் குறை தீர்க்கும் மையம், மாவட்ட ஆட்சியரின் வாராந்திரக் குறைதீர்ப்பு கூட்டம் மற்றும் அரசு அலுவலகங்களில் மனுக்களாகவும் அளித்து வருகின்றனர். மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக தொடர்ந்து அரசுக்கு புகார் சென்றது. இந்த நிலையில் பொது மக்களின் மனுக்களுக்கு 3 நாளில் ஒப்புதல் கொடுத்து, ஒரு மாதத்தில் தீர்வு காணப்பட வேண்டும் என தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தலைமை செயலாளர் அரசு செயலாளர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த் துறை ஆணையர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் பொதுமக்களிடமிருந்து புகார் கிடைத்ததிலிருந்து அதிகபட்சம் ஒரு மாத காலத்திற்குள் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். பொதுமக்களுக்கு அவர்கள் அளித்த புகார் மனுக்கு மூன்று நாட்களில் ஒப்புகை சீட்டு வழங்குவதும், அதன் மீதான முன்னேற்றம் குறித்து தெரிவிக்க வேண்டும்.
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள கால அவகாசம் தேவைப்பட்டால், அது குறித்து மக்களிடம் எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும். கோரிக்கையை ஏற்றுக் கொள்ள சாத்தியமில்லை எனக் கண்டறியப்பட்டால், பாதிக்கப்பட்ட குடிமகனுக்கு ஒரு மாத காலத்திற்குள் நியாயமான பதில் வழங்க வேண்டும். மேலும், பொது மக்களிடம் இருந்து பெறப்படும் குறைத்தீர்ப்பு மனுக்களின் மீது குறிப்பிட்ட காலத்தில் தீர்வுக்காண வேண்டும் என நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழங்கில் வழங்கப்பட்ட தீர்ப்பையும் கூட்டிக் காட்டி உள்ளார். எனவே, மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் மாதந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.