கன்னியாகுமரிக்கு டூர் போறீங்களா? இந்த இடத்தை மிஸ் பண்ணிடாதீங்க..!! அப்டி என்ன சுவாரஸ்யம்?
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொய்கை அணை சுற்றுலா செல்வற்கு ஏற்ற இடங்களில் ஒன்றாக உள்ளது. அணையின் அழகும் குளிர்ந்த காற்றும் உங்களுக்கு சுகமான அனுபவத்தை கொடுக்கும். பொய்கை அணையானது நாகர்கோவிலில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும், ஆரால்வாய்மொழியில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த அணைக்கு போகும் விழியில் பசுமையான வயல்வெளிகளையும், மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகையும் பார்த்து ரசிக்கலாம்.
இந்த அணை, மேற்கு தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் இருக்கக்கூடிய பொய்கை மலையின் அடிவாரத்தில்தான் அமைந்துள்ளது. அணைக்கு போகும் வழியில் அணையில் இருந்து வரும் நீர் செல்லும் பாதைகளையும், மறுகால் கட்டமைப்பையும் பார்க்க முடியும். அங்குள்ள ஒரு பாலத்தில் இருந்து தண்ணீர் பாய்ந்து வரும் காலங்களில் பார்த்தால் ஸ்டெப் ஸ்ட்டாக அருவிபோல் தண்ணீர் கொட்டுவதை பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும். இந்த அணைக்கு அருகில் வரை வாகனங்களில் செல்ல முடியும். அங்கிருந்து பார்த்தால், ஆங்காங்கே உயரமாக நின்று சுழலும் ஏராளமான காற்றலைகளை பார்க்க முடியும். இந்த காட்சி மிகவும் அழகாக இருக்கும்.
இந்த அணை கட்டியதில் இருந்து ஒரே ஒருமுறை மட்டுமே அதன் முழு கொள்ளவை எட்டி நிரம்பி வழிந்ததாகவும், அதேசமயம் இந்த அணையின் நீர் முழுவதும் வற்றியதே இல்லை எனவும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். இந்த அணையின் கரையில் இருந்து மலையின் அழகை பார்க்கும் வியூ மிகவும் அழகாக இருக்கும். இந்த அணை, பொய்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அணையின் கட்டுமானப் பணிகள் 2000ஆவது ஆண்டில் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அணையின் உயரம் 44.65 அடியாகும். குமரி மாவட்டம் கடுக்கரைக்கு மேல் காட்டுப்பகுதியில் உள்ள இரப்பையாறு மற்றும் சுங்கான் ஓடை இரண்டும் இந்த அணையின் முக்கிய நீராதாரமாக உள்ளன.
இந்த அணையில் இருந்து நீரைத் திறந்துவிடுவதற்கு ஆற்று மதகும், வாய்க்கால் மதகும் அமைக்கப்பட்டுள்ளன. ஆற்று மதகு மூலம் கரும்பாட்டு குளம், கிருஷ்ணன் குளம், பொய்கை குளம், குட்டி குளம், செண்பகராமன் பெரியகுளம் உள்ளிட்ட 8 குளங்களுக்கு நீர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த லெட்சுமி புதுகுளம், அனுவத்தி குளம், அத்தி குளம் மற்றும் இராதாபுரம் வட்டத்துகுட்பட்ட சாலை புதுக்குளம், தெற்கு சிவகங்கை குளம், மேல பாலார் குளம், கீழ பாலார் குளம், பழவூர் பெரிய குளம் ஆகியவை வாய்க்கால் மதகு மூலமும் பாசனவசதி பெறுகின்றன. இந்த குளங்களின் மூலமாக 1,357 ஏக்கர் நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெறும் என்று கணக்கிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்ததக்கது.
Read more ; ‘அக்னி ஏவுகணைகளின் தந்தை’ ராம் நரேன் அகர்வால் 83 வயதில் காலமானார்..!!