பரபரப்பு... வன்னியர் இட ஒதுக்கீடு கோரி காலை 10 மணி முதல் தமிழகம் முழுவதும் போராட்டம்...!
வன்னியர் இட ஒதுக்கீடு கோரி இன்று தமிழக முழுவதும் பாமக சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை; உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1000 நாட்கள் ஆகின்றன. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த முதலமைச்சர் ஸ்டாலின், இப்போது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று அறிவித்து பெருந்துரோகம் இழைத்திருக்கிறார் என பாமக குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு; போதிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்கத் தீரப்பை கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 31 ஆம் நாள் வழங்கியது.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிந்தைய சில மாதங்களில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கண்டிப்பாக வழங்கப்படும் என்று சட்டப் பேரவையிலேயே முதலமைச்சர் அறிவித்தார். தேவைப்பட்டால், வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றுவதற்காக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதற்கும் தயாராக இருக்கிறேன் என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையிலான பா.ம.க. குழுவினரிடம் வாக்குறுதி அளித்தார். ஆனால், இப்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று மாற்றிப் பேசுகிறார் என திமுக மீது பாமக குற்றச்சாட்டியுள்ளது.
இந்த நிலையில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இன்றுடன் 1000 நாட்கள் ஆகும் நிலையில், இது வரை வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. அதைக் கண்டித்தும், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் இன்று காலை 10.00 மணிக்கு விழுப்புரத்தில் நடைபெறும் போராட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அவர்கள் பங்கேற்கிறார்கள். அதேபோல தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர், நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்க உள்ளார்.