பூதாகாரமாய் வெடித்த சிவாஜி சிலை விவகாரம்.. மன்னிப்பு கோரினார் பிரதமர் மோடி..!!
மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க்கில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை உடைக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக் கோரினார்.
மகாராஷ்டிர மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிசம்பர் 4ம் தேதி மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 35 அடி உயரம் கொண்ட இந்த சிலை சில நாட்களுக்கு முன் இடிந்து விழுந்தது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மீது கடும் குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் முன் வைத்தன. சிவாஜி சிலை உடைந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சத்ரபதி சிவாஜி பாதம் பணிந்து 100 முறை மன்னிப்பு கேட்க தயார் என்று அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை உடைக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக் கோரினார். மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "இன்று நான் தலை வணங்கி எனது கடவுளான சத்ரபதி சிவாஜி மகாராஜிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. சத்ரபதி சிவாஜி மகாராஜை தங்கள் தெய்வமாகக் கருதி, நான் தலை வணங்கி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். எங்களைப் பொறுத்தவரை, எங்கள் தெய்வத்தை விட பெரியது எதுவுமில்லை" என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கரையும் அவரது சித்தாந்தத்தையும் அடிக்கடி தாக்கி வரும் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளை பிரதமர் கடுமையாக சாடினார். முன்னதாக பால்கரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வத்வான் துறைமுகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தின் மொத்தச் செலவு சுமார் 76,000 கோடி ரூபாய். 1,560 கோடி மதிப்பிலான 218 மீன்பிடித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
Read more ; இனி ரயில் டிக்கெட் புக்கிங் செய்வது ரொம்ப ஈஸி..!! – சூப்பர் பிளானை கையில் எடுத்த IRCTC