38 மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதைகளை நடும் திட்டம்...! ஒத்துழைப்பு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு...!
38 மாவட்டங்களில் அனைத்து நீர் நிலைகளில் ஒரு கோடி பனை விதைகளை நடும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கும் அரசு துணை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின் மாநில மரமான, தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவுடைய, பரமாரிப்பில்லாமலே காலத்துக்கும் பயன் தரும் பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞர்களிடம் பனையின் சிறப்பை கொண்டு செல்லும் விதமாகவும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து ஒருங்கிணைக்கும் காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி 2024, கடந்த ஜூலை 27 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் தலைமையில் துவங்கியது.
செப்டம்பர் மாதத்தில் 5 கட்டங்களாக பனை விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காவிரிக்கரையின் இருபக்கங்களிலும் 416 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு இப்போது யாரவது அதிகாரிகள் ஒத்துழைப்பு தரவில்லை என்ற புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் எட்டு மாவட்டங்களில் அமைந்துள்ள காவேரி ஆற்றங்கரையில் 416 கிலோ மீட்டர் தூரம் மற்றும் 38 மாவட்டங்களில் அனைத்து நீர் நிலைகளில் ஒரு கோடி பனை விதைகளை நடும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கும் அரசு துணை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.