சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு!! சீன மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ள சூப்பரான சிகிச்சை முறை!!
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை முழுவதுமாக குணப்படுத்தி மருத்துவ உலகில் சாதனை புரிந்துள்ளனர் சீன விஞ்ஞானிகள்.
ஷாங்காய் சாங்ஜெங் மருத்துவமனை, சீன அறிவியல் கழகத்தின் மாலிக்கியூல் செல் சையின்ஸ் பிரிவின் சிறப்பு மையம் மற்றும் ரெஞ்சி மருத்துவமனையை சேர்ந்த குழுவினரால் உருவாக்கப்பட்ட இந்த சிகிச்சை முறை, செல் டிஸ்கவரி (Cell Discovery) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. சவுத் சீன மார்னிங் போஸ்ட் செய்தித் தகவலின்படி, 2021ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் செல் டிரான்ஸ்பிளான்ட் அறுவை சிகிச்சை சீன நாட்டை சேர்ந்த ஒரு நோயாளிக்கு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், பதினோரு வாரங்களுக்குள் அவர் இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்தினார். அதைத் தொடர்ந்து ஒரு வருட காலத்தில், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, வாய்வழியாக மருந்துகளை உட்கொண்ட நிலையில், அதன் அளவையும் படிப்படியாகக் குறைத்து இறுதியில் மொத்தமாக மருந்தை நிறுத்திக் கொண்டார். மேலும் இந்த சிகிச்சையின் தொடர் ஆய்வுகள் நோயாளியின் கணைய திசுக்கள் திறம்பட மீட்டெடுக்கப்பட்டது என்பதை காட்டியதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. தற்போது 33 மாதங்களாக அந்த நோயாளி இன்சுலின் ஊசி இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்க்கரை நோய் என்பது உணவை ஆற்றலாக மாற்றுவதில் உடலின் திறனைப் பாதிக்கும் நோயாகும். இதை சரியாக கையாளாவிட்டால், கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். பாரம்பரிய சிகிச்சை முறைகளில் இன்சுலின் ஊசி போடுதல், மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல் ஆகியவற்றுடன் தொடர் கண்காணிப்பு ஆகியவை இருக்கும். இந்த புதிய செல் சிகிச்சை முறை என்பது நோயாளியின் peripheral blood mononuclear cell-கள் மறுபடியும் வடிவமைத்து, அவற்றை "விதை செல்கள்" (seed cells) ஆக மாற்றி செயற்கையான சூழலில் கணைய திசுக்களை மீண்டும் உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டது. மறுசீரமைப்பு மருத்துவம் (regenerative medicine) எனப்படும் புதிய சிகிச்சை அணுகுமுறையில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. சமீப காலமாக அமெரிக்காவில் இருப்பது போல் இந்தியாவிலும் 10 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கும் இந்த பாதிப்புகள் வர தொடங்கியுள்ளது. இந்த நிலையில், சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய செல் சிகிச்சை முறை உண்மையில் பல கோடி மக்களைக் காப்பாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிகிச்சை செலவுகள் அதிகமாக இருக்கும் என்றாலும், நீரிழிவு நோய்க்கு முழுமையான தீர்வு என்பது மருத்துவத் துறையில் புதிய புரட்சியை உருவாக்கக் கூடிய ஒன்று.