பெரம்பலூர் கல்குவாரி ஏலம் விவகாரம்: திமுகவினர் 12 பேர் கைது..!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர், நாராயண மங்கலம், நாட்டார் மங்கலம், பாடாலூர், கல்பாடி வடக்கு, செங்குணம் உள்ளிட்ட 31 கிராமங்களில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளில் கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்வதற்கான மறைமுக ஏலம் நேற்றைய தினம் நடைபெற இருந்தது. இந்த மறைமுக ஏலத்தில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பத்தை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போட வேண்டும்.
விண்ணப்பங்களை சமர்பிக்க அக்டோபர் 30ஆம் தேதி கடைசிநாள் என்பதால் பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்பிக்க பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது திமுகவை சேர்ந்த கட்சி பிரமுகர்களும் மற்ற நிர்வாகிகளும் மாற்றுக் கட்சியினர் யாரும் ஏலத்தை எடுத்துவிடக் கூடாது என்று கூறி தகராற்றில் ஈடுபட்டனர். திமுகவினரை தவிர வேறு யாரும் ஏலம் கேட்பதற்கான விண்ணப்பத்தை பெட்டியில் போடக்கூடாது என தடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து மோதலில் ஈடுபட்ட அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் உதவியாளர் மகேந்திரன், திமுவை சேர்ந்த ரமேஷ், உள்ளிட்ட 10 பேர் மீது 8 வழக்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோதலை தொடர்ந்து நடைபெற இருந்த கல்குவாரி ஏலத்தை தேதி மாவட்ட ஆட்சியர் குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், கட்சி பேதமின்றி குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார், அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாமளாதேவி தலைமையில் குழு அமைத்து குற்றச சம்பவத்தில் ஈடுபட்டவர்ளை தேடும் பணியில் தொடங்கினர். இரவு முழுவதும் நடந்த தேடுதல் பணியில் தற்போது 12 திமுகவினர் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது வழக்குப்பதிவு செய்யப்பட்ட 10 பேர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் புதிதாக 10 திமுகவினர் என 12 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் கல்குவாரி ஏல விண்ணப்பத்தின் போது நடந்த மோதல் தொடர்பாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உதவியாளர் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது 12 திமுகவினரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.