டங்ஸ்டன் விவகாரம்... பொங்கல் தொகுப்பு வேண்டாம்... ரேஷன் கடைகளில் திருப்பி கொடுத்து மக்கள் போராட்டம்...!
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிவரும் மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் கடைகளில் ஒப்படைத்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏல அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து அங்கு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் சுரங்கத்திற்காக வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து மத்திய அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தமிழக அரசு இதனை மறைமுகமாக நிறைவேற்ற துடிப்பதாக பாஜக மாணவர் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
அரசு டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும், மதுரை மேலூர் பகுதியை தமிழ் பண்பாட்டு மண்டலமாக, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் விவசாய சங்க பிரதிநிதிகளும் வலியுறுத்தி நரசிங்கம்பட்டி பெருமாள் மலையில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரம் நேற்று பேரணியாக சென்று மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கி வருகிறது. அதனை முன்னிட்டு அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி பகுதியில் இன்று (ஜன.9) ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் அரிட்டாபட்டியில் 820 குடும்ப அட்டைதாரர்களும், நரசிங்கம்பட்டியில் 444 குடும்ப அட்டை தாரர்களும் உள்ளனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வாங்கிச் சென்றனர்.
மாநில அரசு டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யும் வரை தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பு பொருட்களை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும் என கிராம மக்கள் முடிவெடுத்து ரேஷன் கடைகளை கொடுக்கப்பட்ட தங்கள் பரிசு தொகுப்புகளை பொதுமக்கள் திருப்பிக் கொடுத்தனர். இதனால் பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.