மக்களே உஷார்..!! ஆவினில் காலாவதியான பிஸ்கட் விற்பனை..!! ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்..!!
ஈரோடு ஆவினில் இருந்து காலாவதியான பிஸ்கெட் பாக்கெட்டுகள் விற்பனைக்காக அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) மூலம், தினசரி 2.30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு ஆவினில் இருந்து கோபி பேருந்து நிலையம் மற்றும் கொடிவேரி பகுதியில் இயங்கும் ஆவின் பாலகங்களுக்கு நேற்று ஆவின் பிஸ்கெட் பாக்கெட்டுகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பிஸ்கெட்டுகள் அனைத்தும் காலாவதியானவை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கொடிவேரி பாசனசபை தலைவர் சுபி.தளபதி நம்மிடம் பேசுகையில், ”ஈரோடு ஆவினில் இருந்து காலாவதியான பொருட்கள் தொடர்ந்து விற்பனைக்கு அனுப்பப்படுவதாக, சங்க உறுப்பினர் சிவசுப்பிரமணியம் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, கோபி பேருந்து நிலையம் மற்றும் கொடிவேரி தடுப்பணை பகுதியில் நாங்கள் கண்காணித்தோம். ஆவின் வாகனத்தில் கொண்டு வரப்பட்டு, இந்த இரு பாலகங்களுக்கும் விற்பனைக்கு வழங்கப்பட்ட பிஸ்கெட் பாக்கெட்டுகள் காலாவதியாகி இருந்தன.
ஆவின் வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் உண்ண தகுதியற்ற, காலாவதியான பிஸ்கெட் பாக்கெட்டுகள் எடுத்து வரப்பட்டது. இதையடுத்து, மாவட்ட உணவு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் ஈரோடு ஆட்சியருக்கு ஆன்லைன் வாயிலாக புகார் அளித்தோம். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள், காலாவதியான ஆவின் பிஸ்கெட்டுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதை கண்டறிந்தனர். இந்நிலையில், ஈரோடு ஆவின் நிர்வாகம், கிடங்குகளில் வைத்திருந்த காலாவதியான 6 டன் பிஸ்கெட் பாக்கெட்டுகளை, வேறு இடத்துக்கு மாற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அரசின் தயாரிப்பான ஆவின் பொருட்கள் தரமானதாக இருக்கும் என்று நம்பி வாங்கும் பொதுமக்களை திட்டமிட்டு ஆவின் நிர்வாகம் மோசடி செய்துள்ளது. காலாவதியான பிஸ்கெட் என்று தெரிந்தும், பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் கோபி பேருந்து நிலையம், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் கொடிவேரி தடுப்பணை ஆகிய பகுதிகளில் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுபோல, தமிழ்நாடு முழுவதும் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இந்த பிஸ்கெட்டுகள் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக அரசு விரிவான விசாரணை நடத்தி, தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும்” என்றார்.
Read More : படுதோல்வியடைந்த ’சாமானியன்’..!! ’இனி ஹீரோவாக எடுபடாது’..!! அதிரடி முடிவெடித்த ராமராஜன்..!!