'நீதிமன்றங்களில் கோடிக்கணக்கில் குவிந்து கிடக்கும் நிலுவை வழக்குகள்'..!! மத்திய அரசு அதிர்ச்சி தகவல்..!!
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், நீதிமன்றத்தில் எவ்வளவு வழக்குகள் நிலுவையில் உள்ளது என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு மத்திய அரசு விளக்கமும் அளித்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீதிமன்றத்தில் எவ்வளவு வழக்குகள் நிலுவையில் உள்ளது என கேள்வி முன்வைக்கப்பட்டது. இந்த கேள்விக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அதில், நாட்டில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 5 கோடிக்கும் மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது, “டிசம்பர் 1ஆம் தேதி வரை, 5 கோடியே 8 லட்சத்து 85 ஆயிரத்து 856 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில், 61 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் 25 உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. மாவட்டம் மற்றும் உள்ளூர் நீதிமன்றங்களில் 4.46 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. நாடு முழுவதும் இந்திய நீதித்துறையில் 26,568 நீதிபதிகள் வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் 34 நீதிபதிகள் வரை நியமிக்கலாம். பல்வேறு உயர்நீதிமன்றங்களில் 1,114 நீதிபதிகள் வரை வைத்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் உள்ளூர் நீதிமன்றங்களில் 25,420 நீதிபதிகள் வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.