நீங்க பெத்த பிள்ளைகளாகவே இருந்தாலும் இந்த விஷயத்தில் கவனம்..!! இல்லைனா சாப்பாட்டுக்கே கஷ்டப்படணும்..!!
வயதான காலத்தில் பிள்ளைகள் ஏமாற்றினால், அவர்களிடம் சொத்தை பறிகொடுத்தால், நிச்சயம் சட்டம் உங்களைக் காக்கும். இதுபற்றி சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள பதிவினையும், பெற்றோர்கள் சொத்தை எழுதி கொடுக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்களையும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள பதிவில், ”பெற்றோர் மற்றும் முதியோர் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் 2007 பிரிவு 23 இன் படி, அடிப்படை வசதிகளையும், தேவைகளையும் நிறைவேற்றும் உத்தரவாதத்துடன் ஒரு சொத்து பிள்ளை அல்லது உறவினருக்கு பரிமாற்றம் செய்யப்பட்ட பிறகு சொத்தை பெற்றுக் கொண்டவர் அதை செய்ய தவறினால், அந்த சொத்து பரிமாற்றம செல்லாது என தீர்ப்பாயம் அறிவிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளது.
இந்த சட்டப்பிரிவின் கீழ் முதியோர்கள் தாராளமாக பிள்ளைகளுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்க முடியும். சப் கலெக்டரிடமோ அல்லது மாவட்ட ஆட்சியரிடமோ புகார் அளித்து பத்திரப்பதிவினை ரத்து செய்ய முடியும். ஆனால், அதில் சில சிக்கலும் உள்ளது. பல முதியவர்கள், தங்களது வயதான காலத்தில், தங்கள் பிள்ளைகள் கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில், சொத்தை தானமாக எழுதிக் கொடுக்கின்றனர். அப்படி சொத்தை எழுதி கொடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பெற்றோர் தனது பிள்ளைகளுக்கு சொத்தை எழுதி வைக்கும்போது, வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும். ‘அன்பின் வெளிப்பாட்டால்’ சொத்தை எழுதிவைப்பதாக குறிப்பிட்டிருந்தால், தானமாக கொடுத்த சொத்தை பெற்றோர் உடனடியாக மீட்டுக்கொள்ள முடியும். இருப்பினும், பிள்ளைகள் மீதான பாசத்தால், இறுதிவரை சொத்தை திருப்பிக் கேட்காமல் தங்கள் கொடுமைகளை சகித்துக் கொண்டு வாழ்கிறார்கள். ஒரு உண்மை கதையை இப்போது பார்ப்போம்.
கணவன்-மனைவி, அவருக்கு ஒரு மகன், ஒரு மகள். நன்றாக சம்பாதித்து இருவருக்கும் திருமணம் செய்துவைத்தார். தன்னிடம் இருந்த சேமிப்பு, சொத்து, அனைத்தையும் பிள்ளைகளுக்கு கொடுத்தார். ஒரு காலக்கட்டத்தில் அவரது மனைவி இறந்துவிட்டார். அவரிடம் அப்போது சொத்துக்களோ, சேமிப்பு பணமோ இல்லை. மனைவி இருந்தவரை சாப்பாடு கேட்காமலேயே வரும். ஆனால், மனைவி மறைந்த பின்னர் அவர் நடைபிணமாக மாறினார்.
அவர் பசித்தாலும் மருமகளிடம் சாப்பாடு கேட்க தயங்கினார். சாப்பாட்டை போட்டு சாப்பிட பயந்தார். காரணம் மருமகளின் பேச்சு வேறுமாதிரி இருந்தது. மகனோ எதையும் கண்டுகொள்ளவில்லை. சாப்பாடு கேட்க முடியாமல், செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வந்தார். மகளும் சுத்தமாக கண்டு கொள்ளவில்லை. அவரிடம் ஒரு வேளை சேமிப்போ, சொத்தோ இருந்திருந்தால் கண்டிப்பாக அவரை பிள்ளைகள் மதித்திருப்பார்கள். பாவம் கடைசி வரை எதையும் வெளியில் சொல்லாமல் வேதனையை மனதில் வைத்துக் கொண்டு மறைந்து போனார். அவர் சொத்தை திருப்பி கேட்க வேண்டும் என்ற மனநிலை எல்லாம் அவருக்கு வந்தது கூட இல்லை.