ஒரே நட்சத்திரம், ஒரே ராசிக்காரர்கள் திருமணம் செய்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும்..? கணவன் - மனைவி வாழ்க்கை எப்படி இருக்கும்..?
ஒரே ராசிக்காரர்கள், ஒரே நட்சத்திரக்காரர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா..? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
திருமணம் செய்யக்கூடாத நட்சத்திரம் : பரணி, ஆயில்யம், ஸ்வாதி, சதயம், பூரட்டாதி, கேட்டை, மூலம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள், மணமகள் மணமகன் நட்சத்திரங்களாக இருக்கும்பட்சத்தில் திருமணம் செய்யக்கூடாது. சிறு பொருத்தம் கூட இல்லை என்பதால், இந்த நட்சத்திரக்காரர்களை இணைக்கக்கூடாது. ரோகிணி, திருவாதிரை, மகம், அஸ்தம், விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் மணமகன், மணமகளுக்கு ஒரே நட்சத்திரமாக வந்தால் திருமணம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
பரிகாரம் : அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிடம், அனுஷம், பூராடம், உத்திராடம், புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம், சித்திரை ஆகியவற்றில் ஏதாவது ஒன்று நட்சத்திரமாக வந்தால், திருமணம் செய்து கொள்ளலாம். காரணம் இவை, மத்திம பலன்களை தரும் வகையில் இணைக்கக் கூடிய நட்சத்திரங்கள் ஆகும். எனவே, இந்த நட்சத்திரங்களை இருவருமே கொண்டவர்களாக இருந்தால் பரிகாரத்திற்கு பிறகு திருமணம் செய்து கொள்ளலாம்.
ஆண், பெண் இருவரும் ஒரே நட்சத்திரமாக, ஒரே ராசியாக இருந்தால் இவர்களுக்கு திருமணம் செய்வதை தவிர்க்கலாம். காரணம், ஏழரைச் சனி, கண்டக சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி வரும்போது இருவருக்குமே துன்பம் வந்து சேரும். அதேபோல, குரு பகவானும் ஜென்ம குருவாகவும், அஷ்டம குருவாகவும் வரும்போதும் துன்பங்களையே ஏற்படுத்திவிடுவார். எனவேதான், ஒரே ராசியாகவோ அல்லது ஒரே நட்சத்திரமாகவோ உள்ளவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது என்கிறார்கள்.
கணவருக்கு மோசமான கோச்சார கிரக நிலை இருந்தால், மனைவிக்கு அந்த சமயத்தில் சுபமான அல்லது மிதமான கோச்சார பலன் இருக்க வேண்டும். அப்போதுதான் ஓரளவாவது சிரமப்படாமல் ஒருவர் கஷ்டப்பட்டாலும், மற்றொருவர் குடும்பத்தை தாங்கி பிடித்து இழுத்து செல்வார். எனவே, திருமணம் செய்யும் ஆண் மற்றும் பெண் தம்பதியினருக்கு ஒரே நட்சத்திரம் இருந்தால், நட்சத்திர பொருத்தத்தில் 10 பொருத்தத்திற்கும் மேற்பட்ட பொருத்தங்கள் இருந்தாலும் கூட, மாங்கல்ய பொருத்தம் இருக்காது.
கிரக நிலைகள் : ஒரே ராசி உடைய தம்பதிகளின் வாழ்க்கையில் கிரக நிலைகள் சரியில்லாதபோது, பிரச்சனைகள் ஏற்படும். இதுபோல இன்னல்கள் ஏற்பட்டால், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று தம்பதியினர் வழிபடலாம். இதன் மூலம் தம்பதிகளிடையே சண்டை சச்சரவுகள் குறையும் என்று சொல்லப்படுகிறது.