புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு இடங்களுக்கு பட்டா...! தமிழக அரசு வெளியிட்ட அரசாணை..
கடந்த ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக உள்ள புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்வது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டாவும், நீர் நிலையில் ஆக்கிரமிப்பில் உள்ளவர்களுக்கு மறு குடியமர்வு செய்து தருவது அரசின் கடமை.
இது குறித்து 2018-ம் ஆண்டு வெளியான அரசாணையில்; அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக குடியிருப்பு மூலம் உள்ள ஆக்கிரமணங்களை வரன்முறைப்படுத்துவது தொடர்பான நெறிமுறைகள் வழங்குவது பற்றிய கலந்தாய்வு நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் உள்ள நெறிமுறைகள் மற்றும் அதனைத் தொடர்ந்து, தற்போது செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள சிறப்பு வரன்முறை திட்டத்திற்கான வரைவு நெறிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டது. கலந்தாய்வில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் கூடுதல் தலைமைச் செயலாளர்/நில நிருவாக ஆணையர் கீழ்க்கண்டவாறு வழிகாட்டி மற்றும் நெறிமுறைகளை வகுக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாக உள்ள ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து, வீட்டுமனைப் பட்டா வழங்க தொடர் கோரிக்கைகள் வருவதைத் தொடர்ந்து, அனைத்து விதமான நீர்நிலைகள், உள்ளாட்சிகள், மாவட்ட அமைப்புகளின் சாலைகள், மாவட்ட, மாநில தேசிய நெடுஞ்சாலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களைத் தவிர்த்து, பிற புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பு மூலம் 5 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமணம் செய்துள்ள தகுதியுள்ள நபர்களுக்கு அதனை வரன்முறை செய்து வீட்டுமனைப்பட்டா வழங்க ஒரு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுத்திடலாம்.
அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பு மூலம் ஆக்கிரமிப்பு செய்துள்ள பயனாளிகளின் ஆண்டு வருமான வரம்பாக, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு குடும்பத்திற்கு ஆண்டு வருமானம் ரூ.1,00,000/- என நிர்ணயம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சென்னை மாநகர் சூழ் பகுதிகள், இதர மாநகராட்சி மற்றும் நகரப்பகுதிகளில் வரன்முறைப் படுத்துவதற்கு உள்ள தடையாணை தொடரலாம். மற்ற நகரங்களில் இந்த தடையாணையினை விலக்கி மாவட்ட அளவிலான குழு உரிய நடைமுறைகளை பின்பற்றி வரன்முறை செய்யலாம். சென்னை மாநகர், மாநகர் சூழ் பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சி பகுதிகளில் அரசின் அனைத்து புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு தொடர்பாக மாவட்ட நிர்வாகம் GLR மற்றும் புலத்தணிக்கை ஆகியவற்றின் மூலமாக விபரங்களை சேகரித்து கொள்கை முடிவு எடுக்கும் பொருட்டு அவ்விபரங்களை வைத்திருக்க வேண்டும்.