பாரிஸ் ஒலிம்பிக்!. தொடரும் சீனாவின் ஆதிக்கம்!. 6-ம் நாள் முடிவில் பதக்கம் வென்றவர்களின் முழு பட்டியல்!.
Olympics Medals: பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 6 நாட்களுக்கான போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், முதல் நாடாக சீனா தங்கப் பதக்கத்தை வென்றது. இந்நிலையில், 6 நாட்கள் முடிவில் பதக்கப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்திய நாடுகளில் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 1ம் தேதி முடிவில் அட்டவணையில் பதக்க எண்ணிக்கை மற்றும் சிறப்பம்சங்களில் எந்தெந்த நாடுகள் முன்னிலை வகிக்கின்றன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். அந்தவகையில், சீனா 11 தங்கப்பதங்களை தட்டித்தூக்கி பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்து வருகிறது. நேற்றைய பதக்கங்களின் அடிப்படையில் 7வது இடத்தில் இருந்த அமெரிக்கா, மொத்தம் 37 பதக்கங்களை குவித்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அதாவது, ஆகஸ்ட் 1ம் தேதி முடிவில், கயாக் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியை சேர்ந்த ஜியோவானி டி ஜெனாரோ தங்கப்பதக்கம் வென்றார். பிரான்ஸை சேர்ந்த டிடூவான் காஸ்ட்ரிக் வெள்ளிப்பதக்கமும், ஸ்பெயினின் Pau Echaniz வெண்கலும் வென்றனர். இதேபோல், பெண்களுக்கான வாள்வீச்சு போட்டியில் இத்தாலியை வீழ்த்தி அமெரிக்கா தங்கப் பதக்கம் வென்றது. இத்தாலி வெள்ளி பதக்கமும், ஜப்பான் வெண்கலமும் வென்றது.
ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில், அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் தங்கப்பதக்கமும், பிரேசிலின் ரெபேகா ஆண்ட்ரேட் வெள்ளிப்பதக்கமும், அமெரிக்காவின் சுனிசா லீ வெண்கல பதக்கமும் வென்றனர். பாரீஸ் ஒலிம்பிக்கில் 100 கிலோவுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஜூடோ பிரிவில் அஜர்பைஜானை சேர்ந்த Zelym Kotsoiev தங்கம் வென்றார். ஜார்ஜியாவின் இலியா சுலமானிட்ஸே வெள்ளியும், இஸ்ரேலின் பீட்டர் பால்ட்சிக், மற்றும் உஸ்பெகிஸ்தானின் முசாபர்பெக் துரோபோயேவ் ஆகியோர் வெண்கலம் வென்றனர். இதேபோல் 78 கிலோ பெண்களுக்கான ஜூடோ பிரிவில், ஆலிஸ் பெல்லாண்டி - இத்தாலி, வெள்ளி: இன்பார் லானிர் - இஸ்ரேல், வெண்கலம்: மா ஜென்ஜாவோ- சீனா மற்றும் பாட்ரிசியா சாம்பயோ- போர்ச்சுகல்.
ரோயிங் ஆண்கள் இரட்டை ஸ்கல்ஸ் பிரிவில் ருமேனியாவை சேர்ந்த ஆண்ட்ரி-செபாஸ்டியன் கார்னியா மற்றும் மரியன் எனச்சே ஆகியோர் தங்கம் வென்றனர். நெதர்லாந்தின் ஸ்டீஃப் ப்ரோனிங்க் மற்றும் மெல்வின் ட்வெல்லர் வெள்ளி வென்றனர். அயர்லாந்தை சேர்ந்த பிலிப் டாய்ல் மற்றும் டெய்ர் லிஞ்ச் ஆகியோர் வெண்கலம் வென்றனர். இதேபோல், பெண்களின் இரட்டை ஸ்கல்ஸ் போட்டியில், ஆஸ்திரேலியாவின் ப்ரூக் பிரான்சிஸ் மற்றும் லூசி ஸ்பூர்ஸ் ஆகியோர் தங்கம் பதக்கமும், ருமேனியாவின் அன்குடா போட்னர் மற்றும் சிமோனா ராடிஸ் ஆகியோர் வெள்ளியும், பிரிட்டனின் மதில்டா ஹோட்கின்ஸ் பைர்ன் மற்றும் ரெபேக்கா வைல்ட் ஆகியோர் வெண்கலும் வென்றனர்.
ரோயிங் ஆண்கள் நான்கு ஸ்கல்ஸ் பிரிவில் அமெரிக்கா தங்கமும், நியூசிலாந்து வெள்ளியும், பிரிட்டன் வெண்கலமும் வென்றது. இதேபோல், ரோயிங் பெண்கள் நான்கு ஸ்கல்ஸ் பிரிவில் நெதர்லாந்து அணி தங்கம் வென்றது, பிரிட்டன் வெள்ளியும், நியூசிலாந்து வெண்கலமும் வென்றது. ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலையில் சீனாவின் லியு யுகுன் தங்கம் வென்றார். உக்ரைனின் செர்ஹி குலிஷ் வெள்ளியும், இந்தியாவின் ஸ்வப்னில் குசலே வெண்கலமும் வென்றனர்.
நீச்சல்: ஆண்களுக்கான 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில் ஹங்கேரியின் ஹூபர்ட் கோஸ் தங்கம் வென்று சாதனை படைத்தார். கிரீஸ் நாட்டை சேர்ந்த அப்போஸ்டோலோஸ் கிறிஸ்டோ வெள்ளியும், சுவிட்சர்லாந்தின் ரோமன் மித்யுகோவ் வெண்கலமும் வென்றனர். பெண்களுக்கான 200மீ போட்டியில், கனடாவின் மெக்கின்டோஷ்- தங்கம், அமெரிக்காவின் ரீகன் ஸ்மித்- வெள்ளி, சீனாவின் ஜாங் யூஃபீ - வெண்கலம் வென்றனர்.
வியாழன் அன்று நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 200 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக்கில் அமெரிக்க வீராங்கனை கேட் டக்ளஸ் தங்கப் பதக்கம் வென்றார். தென்னாப்பிரிக்காவின் டட்ஜானா ஸ்மித் - வெள்ளி, நெதர்லாந்தின் டெஸ் ஸ்கௌடன் - வெண்கலம் வென்றனர். ஒலிம்பிக் சாதனையில் பெண்கள் ரிலே அணி 4x200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து, ஆஸ்திரேலியா பாரீஸ் விளையாட்டுப் போட்டியில் எட்டாவது தங்கப் பதக்கத்தை வென்றது. அமெரிக்கா - வெள்ளி, சீனா வெண்கலம் வென்றது.
ஆண்களுக்கான 20 கிமீ ரேஸ் வாக்கில் ஈக்வடார் நாட்டை சேர்ந்த பிரையன் பின்டாடோ தங்கம் வென்றார். பிரேசிலின் Caio Bonfim - வெள்ளி, ஸ்பெயினின் அல்வாரோ மார்டின் - வெண்கலம் வென்றனர். பெண்களுக்கான 20 கிமீ ரேஸ் வாக்கில் சீனாவின் யாங் ஜியாயு - தங்கம், ஸ்பெயினின் மரியா பெரெஸ் - வெள்ளி, ஆஸ்திரேலியாவின் ஜெமிமா மான்டாக் - வெண்கலம் வென்றனர்.
இதன்படி, இதன்படி, 11 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. 9 தங்கம், 15 வெள்ளி, 13 வெண்கலம் என 37 பதக்கங்களுடன் அமெரிக்கா 2வது இடத்திலும், 8 தங்கம், 11 வெள்ளி, 8 வெண்கலம் என 27 பதக்கங்களுடன் 3வது இடத்தில் பிரான்ஸும், 8 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என 18 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 4வது இடத்திலும், 8 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் என 16 பதக்கங்களுடன் ஜப்பான் 5வது இடத்திலும்,
பிரிட்டன் 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 20 பதக்கங்களுடன் 6வது இடத்திலும், தென்கொரியா 6 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களுடன் 7வது இடத்திலும், 5 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என 16 பதக்கங்களுடன் இத்தாலி 8வது இடத்திலும் உள்ளது. 3 வெண்கல பதக்கத்துடன் இந்தியா 44வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
Readmore: Tn Govt : அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.882 ஊதியமாக வழங்கப்படும்…!