பெற்றோர்களே அலட்சியமா இருக்காதீங்க..!! தொண்டைக்குள் சிக்கி மூச்சுத்திணறல்..!! 8 மாத ஆண் குழந்தை பரிதாப பலி..!!
சிறிய பந்து தொண்டைக்குள் சிக்கியதில், 8 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காசு, பணத்தை விட பெற்றோருக்குத் தங்கள் குழந்தை என்பது மேலானது. குழந்தையை கொஞ்சி மகிழும் தருணத்திற்கு ஈடாக எதையும் கூறிவிட முடியாது. முன்பு, குழந்தையின் ஒவ்வோரு அசைவையுமே பெற்றோர் ஒரு கணம் தவறவிடாமல் கண்காணிப்பார்கள். ஆனால், தற்போதைய அவசர யுகத்தில் ஒரு சில வீடுகளில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால் குழந்தைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு போன்றவை கேள்விக்குறியாகிறது.
இதுபோன்ற இடங்களில் தவழும் குழந்தைகள், எதார்த்தமாகச் செய்யும் சிறு விஷயங்கள்கூட பெரிய ஆபத்தில் முடியக்கூடும். அந்தவகையில், சிறிய பந்து ஒன்று தொண்டைக்குள் சிக்கிக் கொண்டதில், 8 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே அரங்கன்குப்பம் பகுதியில் அஜீத்குமார் வசித்து வருகிறார். இவரது 8 மாத ஆண் குழந்தை சர்வேஷை வீட்டில் படுக்க வைத்து விட்டு, பெற்றோர் வீட்டு வேலை செய்து வந்துள்ளனர்.
குழந்தைக்கு விளையாட சிறிய பந்து ஒன்றை கொடுத்துள்ளனர். அதை வைத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, பெற்றோர் கவனிக்காதபோது விழுங்கி விட்டது. இதையடுத்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டு அழுதபோது தான், பெற்றோருக்கு விஷயம் தெரிந்தது. பந்தை எடுக்க அவர்கள் முயற்சித்தனர். ஆனால், முடியவில்லை. பின்னர், மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு செல்வதற்குள் பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.