ஆரஞ்சு அலர்ட் : தமிழகத்தின் இந்த 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..! உங்க மாவட்டமும் இருக்கா..?
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளைய தினம் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்பதற்காக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆரஞ்சு அலர்ட் மாவட்ட நிர்வாகம் உரிய முன்னேற்பாடுகளை செய்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாளை, தேனி, திண்டுக்கல்,கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் நவம்பர் 6-ந் தேதி வரை மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
நாளை தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட கல்வி அதிகாரி அறிவிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட அறிவிப்பில், நெல்லையில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.