மக்களே...! சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்... தமிழக முழுவதும் 19 மாவட்டத்தில் கனமழை...!
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 19 மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகின்றன. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது மேற்கு, வடமேற்குதிசை யில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, அதன் பின்னர் 48 மணி நேரத்தில் வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். தமிழகத்தில் இன்று முதல் 16-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களிலும், 17, 18, 19-ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை கனமழையும் பெய்யக்கூடும். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணா மலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 17-ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.