”முட்டையிடும் கோழிக்கு தான் வலி தெரியும்”..!! நிவாரண நிதி குறித்து ஆர்.எஸ்.பாரதி பதில்..!!
சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டிரைவர் தெருவில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக அரசு சார்பில் பல்வேறு பகுதிகளில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்று எழும்பூர் பகுதிக்கு உட்பட்ட டிரைவர் தெருவில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்து பேசிய அவர், நிவாரண நிதி குறித்து எடப்பாடி பழனிசாமி கேட்க வேண்டியது மத்திய அரசிடம் தமிழக அரசிடம் அல்ல. அண்ணாமலைக்கு விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறக்க மட்டும்தான் தெரியும். இதை தவிர்த்து அவருக்கு வேறு எதுவும் தெரியாது.
எடப்பாடி பழனிசாமிக்கு எவ்வளவு நிவாரணம் அளித்தாலும் பத்தாது 7.50 லட்சம் கோடி ரூபாய் அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது கடன் சுமையை வைத்து சென்றார்கள். முட்டையிடும் கோழிக்குத்தான் தெரியும் அதன் வலி. 2015ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியை காட்டிலும் தற்பொழுது அதிகப்படியான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தரவிருக்கும் பேரிடர் நிவாரண நிதி குறைவாக இருந்தாலும் கூட முதல்வர் அதனை சமாளிக்கும் திறன் படைத்தவர். மத்திய அரசு நிவாரண நிதியை வழங்காவிட்டாலும் முதல்வர் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தொடர்ந்து செய்யும் வல்லமை படைத்தவர்’’ என கூறினார்.