வெறும் 17 வாக்குகள் மட்டுமே பதிவு - அதிர்ச்சி கொடுத்த ஏகனாபுரம் மக்கள்
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 5,200 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில் விவசாய நிலங்கள், நீர் நிலைகள் மற்றும் பொதுமக்களின் குடியிருப்புகள் என பல இடங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. ஏகனாபுரம் உள்ளிட்ட சில கிராமங்கள் முழுமையாக இந்த விமான நிலையத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து ஏகனாபுரம் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்கள் போராட்டம் 625 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இவர்கள் போராட்டம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், 1400 வாக்காளர்கள் உள்ள ஏகனாபுரம் கிராமத்தில் இன்று இதுவரை ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை.மக்கள் தேர்தல் புறக்கணிப்பைக் கைவிட்டு வாக்களிக்கும்படி தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் எந்த பேச்சுவார்த்தையும் எடுபடவில்லை. இந்த நிலையில் மாலை 7 மணி நிலவரப்படி வெறும் 17 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.