’120 கைதிகளுக்கு ஒரே கழிப்பறை’..!! ’என்னால முடியல’..!! கதறும் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி..!!
சென்னை பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக கொடிக்கம்பத்தை அகற்றுவதற்காக சென்ற வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில், அக்கட்சியின் நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 5 பேர் கைதாகினர்.
இவர்களின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். அமர் பிரசாத் ரெட்டி தாக்கல் செய்த மனுவில், சம்பவம் நடைபெற்ற நேரத்தில், தான் அந்த இடத்திலேயே இல்லை என்றும் அரசியல் உள்நோக்கத்தோடு தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்டே நீதிமன்ற விடுமுறைக்கு முன்னர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் மிகுந்த சிரமத்தைத் தான் எதிர்கொள்வதாக தெரிவித்திருக்கிறார். 2,000 விசாரணைக் கைதிகளை அடைக்க வேண்டிய இடத்தில் 2,910 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், 500 பேருக்கு ஒரு சமையல் அறை என அல்லாமல் 2,910 கைதிகளுக்கும் ஒரே ஒரு சமையலறை உள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
10 கைதிகளுக்கு ஒரு கழிப்பறை என்ற விதியை மீறி 120 கைதிகள் ஒரே கழிப்பறையை பயன்படுத்தி வருவதாகவும், தன்னை அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என முன்னாள் உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் மற்றும் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் மிரட்டி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த மனு நீதிபதி சி வி கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.