சாலையில் கொட்டிய எண்ணெய் கழிவு.. வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்..!! - சென்னையில் பரபரப்பு
சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து எண்ணெய் கழிவு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று நேற்று ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பூந்தமல்லி நெடுஞ்சாலை, வானகரம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற வாகனங்கள் திடீரென நின்றதால் எண்ணெய் கழிவு ஏற்றி வந்த லாரி டிரைவர் திடீரென்று பிரேக் போட்டுள்ளார். இதில், லாரியில் ததும்ப ததும்ப எடுத்து வந்த எண்ணெய் கழிவுகள், மேல்மூடி வழியாக வழிந்து சாலையில் கொட்டியது.
இதனால் சாலை முழுவதும் எண்ணெய் கழிவு படலமாக மாறியது. அப்போது, அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்தும், எண்ணெய் கழிவில் வாகனங்களை இயக்க முடியாமலும் சிரமப்பட்டனர். தகவலறிந்து வந்த போரூர் போக்குவரத்து போலீசார், லாரி தண்ணீரை எடுத்து வந்து, எண்ணெய் கழிவு படிந்த மண்ணில் ஊற்றி சுத்தம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின், சாலையில் கொட்டிய எண்ணெய் கழிவுகள் முழுதும் அகற்றப்பட்டன.
பின்பு சாலையில் கொட்டிய எண்ணெய் கழிவு முழுவதும் சுத்தம் செய்த பிறகே அந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. விசாரணையில், இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து சிமென்ட் கம்பெனிக்கு இந்த கழிவுகள் எடுத்து செல்லப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது.
Read more ; குவாண்டம் கம்ப்யூட்டருக்கான புதிய சிப் அறிமுகம்..!! கூகுள் சாதனை.. சிறப்பம்சங்கள் என்னென்ன?