பொதுத் தேர்வு வினாத்தாள் கசிந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு...! பள்ளி கல்வித்துறை அதிரடி...
தமிழக பள்ளிக் கல்வியில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதற்குமுன் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 12 முதல் 24-ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அரசு தேர்வுத் துறை சார்பில் பொதுத் தேர்வு பணிகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 200-க்கும்மேற்பட்ட வினாத்தாள், விடைத்தாள் பாதுகாப்பு மையங்களை சரியாக வைத்திருக்க வேண்டும். அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அமைத்திருக்க வேண்டும். பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் வினாத்தாள் கசிந்தால், அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும். தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையோ, தனியார் பள்ளிகளின் முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்களையோ முதன்மை கண்காணிப்பாளராக நியமனம் செய்யக்கூடாது.
மேலும் தேர்வு மையத்துக்கு நியமிக்கப்படும் முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் ஒரே பள்ளியை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது. அறை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் தினத்தன்று சம்பந்தப்பட்ட பாடத்தை போதிக்கும் ஆசிரியராக இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அறை கண்காணிப்பாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும்.