”இனி பத்திரப்பதிவு அலுவலகம் செல்லாமல் திருமணத்தை பதிவு செய்யலாம்”..!! தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்..!!
தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் திருமணங்களை பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. இதற்காக தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் 2009ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் நடைபெறும் திருமணங்களை பதிவு செய்து கொள்ளலாம். இந்த சட்டம் வந்த பிறகு கூட தமிழ்நாட்டில் சொற்ப அளவிலான திருமணங்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது.
வீடுகள், திருமண மண்டபங்கள் மற்றும் கோவில்களில் நடக்கும் திருமணங்களை பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதற்கான ஆவணங்களை கொடுத்து பதிவு செய்யலாம். ஆனால், பாஸ்போர்ட் பெறும் தம்பதிகள், காதல் திருமணங்கள் செய்பவர்கள் மட்டுமே தங்களது திருமணங்களை பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு அரசு ஆய்வு செய்ததில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் சான்றிதழ் பெறுவதில் பொதுமக்கள் பல்வேறு சிக்கல்களை சந்திப்பது தெரியவந்தது.
குறிப்பாக, அரசு திருமண பதிவுக்கு கட்டணமாக ரூ.100-ம் மற்றும் கம்ப்யூட்டர் கட்டணமாக ரூ.100-ம் என மொத்தமே ரூ.200 தான் செலுத்த வேண்டும். ஆனால், பொதுமக்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை லஞ்சம் வசூலிப்பது தெரியவந்துள்ளது. எனவே, இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், பொதுமக்களே நேரடியாக ஆன்லைனில் திருமண பதிவுகளை பதிவு செய்யும் நடைமுறையை தமிழ்நாடு அரசு கொண்டு வர உள்ளது.
அதன்படி, தம்பதிகள் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நேரடியாக இனி வர தேவையில்லை. அவர்கள் நேரடியாக வீட்டில் இருந்தே திருமணப் பதிவை ஆன்லைனில் மேற்கொள்ளலாம். கட்டணத்தையும் அதில் செலுத்தி விடலாம். திருமணத்திற்கான ஆவணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் உடனடியாக சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் முதலில் தமிழ்நாடு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்பவர்களுக்கு பொருந்தும். விரைவில், இந்த நடைமுறை செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : தவெக-வின் 2-வது மாநாட்டில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய்..? என்ன செய்யப்போகிறார் தெரியுமா..?