இனி ரயில் பயணிகளுக்கு இலவச உணவு, முழு ரீஃபண்ட்.. இந்திய ரயில்வே சொன்ன குட்நியூஸ்.
குளிர்காலம் வந்துவிட்ட நிலையில் கடுமையான மூடுபனி, பார்வைத்திறன் குறைதல் உள்ளிட்ட பல இடையூறுகள் காரணமாக ரயில்கள் தாமதமாக வருவது என்பது பொதுவான நிகழ்வாக மாறிவிடும்.
ஆனால் ரயில்கள் தாமதமாக வரும் போது, பயணிகள் அதிக சிரமத்தை எதிர்கொள்வதை தவிர்க்க, இந்திய ரயில்வே சிறப்பு சேவைகளை வழங்க உள்ளது. அதன்படி சதாப்தி, ராஜ்தானி மற்றும் துரந்தோ எக்ஸ்பிரஸ் போன்ற பிரீமியம் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு சிறப்பு சேவைகள் கிடைக்கும்.
IRCTC கேட்டரிங் கொள்கையின்படி, இந்த ரயில்களில் பயணம் செய்பவர்களின் ரயில் திட்டமிடப்பட்ட வருகை நேரத்தை விட 2 அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் தாமதமாக வந்தால், பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும். நாளின் நேரத்தைப் பொறுத்து, பயணிகளுக்கு உணவுகள் இலவசமாக வழங்கப்படும்.
தேநீர்/காபி சேவை:
ரயில் தாமதமாக வரும் பட்சத்தில் பயணிகள் தங்கள் பயணத்தை தொடங்கும் போது, பிஸ்கட்களுடன் தேநீர் அல்லது காபி வழங்கப்படுகிறது. சர்க்கரை அல்லது சர்க்கரை இல்லாத பாக்கெட்டுகள் மற்றும் பால் க்ரீமர் ஆகியவற்றை உள்ளடக்கிய காபி அல்லது டீ கிட் வழங்கப்படும். தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப காபி அல்லது டீயை தேர்வு செய்யலாம்.
காலை உணவு அல்லது மாலை தேநீர்:
காலை உணவு அல்லது மாலை தேநீர் ஆகியவை பயணிகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம், பயணிகள் எளிமையான ஆனால் திருப்தியான உணவை சாப்பிட முடியும். பொதுவாக நான்கு பிரட் (வெள்ளை அல்லது பழுப்பு), வெண்ணெய், 200 மில்லி பழ பானம் மற்றும் ஒரு கப் தேநீர் அல்லது காபி ஆகியவை அடங்கும்.
இது எளிய உணவு பயணிகள் தங்கள் நாளைத் தொடங்க அல்லது மாலை நேரங்களில் அவர்களுக்குப் புத்துணர்ச்சியளிப்பதை உறுதி செய்கிறது.
மதிய உணவு அல்லது இரவு உணவு:
ஆரோக்கியமான, நன்கு சமச்சீரான உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, IRCTC பல்வேறு மதிய உணவு மற்றும் இரவு உணவுகளை வழங்குகிறது. சாதம், பருப்பு, ஊறுகாய் பாக்கெட் ஆகியவை மதிய உணவாக வழங்கபப்டும்.
சாதத்திற்கு மாற்றாக பூரி மற்றும் காய்கறி கலவையுடன் ஊறுகாயும் சேர்த்து வழங்கப்படும்.
பணம் திரும்ப கிடைக்கும் :
சில நேரங்களில், ரயில் 3 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகும்போது அல்லது ரத்து செய்யப்படும் போது அந்த ரயில் பயணிகள் தங்கள் டிக்கெட்டை ரத்து செய்தால் முழு பணத்தையும் திரும்பப் பெற முடியும்.
பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளும் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், ஆன்லைனிலேயே டிக்கெட்டை ரத்து செய்யலாம். ரயில்வே கவுன்டரில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், பணத்தை திரும்பப் பெற நேரில் சென்று ரத்து செய்ய வேண்டும்.
கூடுதல் வசதிகள்
உணவு மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவதை தவிர, இந்திய ரயில்வே ரயில் தாமதத்தின் போது பயணிகளின் வசதியை உறுதிப்படுத்த கூடுதல் வசதிகளை வழங்குகிறது. ரயில் நிலையங்களில் இருக்கும் காத்திருப்பு அறைகளில் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் பயணிகள் ஓய்வெடுக்கலாம். பயணிகள் தங்கள் ரயில்களுக்காக காத்திருக்கும் போது அவர்களுக்கு வசதியான சூழலை உறுதிசெய்ய ரயில்வே இந்த வசதியை வழங்குகிறது.
ரயில் நிலையங்களில் உணவுக் கடைகள் நீண்ட நேரம் திறந்திருக்கும், குறிப்பாக இரவு நேரப் பயணிகளுக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ரயில்வே பாதுகாப்புப் படையில் (RPF) கூடுதல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
Read More : ரூ.6000.. பி.எம் கிசான் திட்டத்தில் போலி பயனாளிகளை அடையாளம் காண தணிக்கை…! மத்திய அரசு அதிரடி