"தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது"..!! கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் கேவியட் மனு தாக்கல்..!!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் விஷ சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கன்னுக்குட்டி எனும் கோவிந்தராஜ், அவருடைய மனைவி விஜயா, அவரது சகோதரர் தாமோதரன் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, விஷச் சாராயமான மெத்தனாலை சப்ளை செய்த சின்னத்துரை, ஜோசப் ராஜா, மதன் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், விஷச் சாராய மரணங்களுக்கு காரணமான மெத்தனாலை சப்ளைச் செய்த முக்கிய குற்றவாளியான சிவக்குமார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, அதிமுக, பாஜக, பாமக சார்பில் இந்த வழக்கில் சிபிஐ விசாரிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதாவது, விஷச் சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் பாஜகவின் வழக்கறிஞர் மோகன்தாஸ் சார்பில் வழக்கறிஞர்கள் ஜி.எஸ்.மணி, ஆர்.சதீஷும், பாமக வழக்கறிஞர் கே.பாலு சார்பில் வழக்கறிஞர் எஸ்.தனஞ்செயனும் கேவியட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதாவது, கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில், தங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என தெரிவித்துள்ளனர்.