’இனி வங்கிக்கும் போக வேண்டியதில்லை... டெபிட் கார்டும் தேவையில்லை’..!! ஏடிஎம்மில் இப்படி கூட பணம் எடுக்கலாமா..?
வங்கிக்கு நேரடியாக சென்று பணம் எடுக்க வேண்டும் என்றால், வரிசையில் காத்திருக்க வேண்டும். சலான் நிரப்பி கொடுத்து கையெழுத்து போட்டு ஒரு அதிகாரியிடம் கையெழுத்து வாங்கி கேஷியரிடம் கொண்டு கொடுத்தால் டோக்கன் முறை. வெயிட் பண்ணுங்க என வங்கியில் உட்கார வைத்து விடுவார்கள். டோக்கன் நம்பர் அழைக்கப்பட்டதும் கையில் பணம் வாங்கி சரிபார்த்து வர வேண்டும். இவைகளில் இருந்து தப்பிக்க தான் ஏடிஎம் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. மெஷினில் கார்டை சொருகி உடனே பணம் எடுத்துவிடலாம்.
நம்மில் பலர் கையில் டெபிட் கார்டை எடுக்காமல் பணம் எடுப்பதற்கு ஏடிஎம் மையங்களுக்கு சென்று அனுபவங்களை கொண்டு இருக்கலாம். இப்போது ஏடிஎம் மையங்களில் டெபிட் கார்டு இல்லாமல் யுபிஐ மூலமாக பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா வழங்கி வருகிறது. இதன் மூலம் பயனர்கள் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம்.
வங்கிகள் இந்த அம்சத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் எச்டிஎப்சி வங்கி உட்பட இன்னும் சில வங்கிகளில் உள்ளது. பயனர்கள் தாங்கள் பயன்படுத்தி வரும் யுபிஐ சேவையை வழங்கும் அப்ளிகேஷன்களை இதற்கு பயன்படுத்தலாம். ஏடிஎம் இயந்திரத்தின் திரையில் UPI cash withdrawal என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். உங்களுக்கு தேவையான தொகையை அதில் உள்ளீடு செய்ய வேண்டும். ஏடிஎம் திரையில் க்யூஆர் கோடு காண்பிக்கப்படும். அதை போனில் உள்ள யுபிஐ செயலி மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் யுபிஐ செயலியின் பின் நம்பரை உள்ளிட வேண்டும். தற்போது நீங்கள் தேர்வு செய்த பணத்தை ஏடிஎம்மில் இருந்து டெபிட் கார்டு இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம்.