மருந்துகளும் இல்லை, மருத்துவ சாதனங்களும் இல்லை..!! கள்ளக்குறிச்சியில் உயிரிழப்பு அதிகரிக்க இதுதான் காரணமா..?
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அத்தியாவசிய மருந்துகளும், மருத்துவச் சாதனங்களும் இல்லாத அவலம் நீடிப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்னும் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய மருந்துகளும், மருத்துவ சாதனங்களும் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்துவிட்டு வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பு கூறுகையில், ”மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தியவர்களுக்கு அதை முறிக்க மாற்று மருந்து கொடுக்க வேண்டும். மெத்தனால் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தி நச்சுத்தன்மையாக மாறுவதை இந்த மருந்து தடுக்கும். ஆனால், அந்த மருந்து இங்கு இருப்பில் இல்லை. மரக்காணம் சம்பவம் நடந்தபோது, அரசு இந்த மருந்தை வாங்கி கையிருப்பில் வைத்திருக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை அந்த மருந்து கையிருப்பில் இல்லாததால் சிகிச்சைக்கு வந்தோருக்கு கொடுக்க முடியவில்லை.
தற்போது 50 பேருக்கு மேல் மெத்தனால் சாராயத்தால் இறந்துள்ளனர். சுமார் ரூ.50 லட்சம் செலவழித்து மாற்று மருந்தை வாங்கியிருந்தால், அதை பயன்படுத்தி இருக்கலாம். இனியாவது அரசு அந்த மருந்தை வாங்கி கொடுப்பது அவசியம்” என்றனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவ உபகரணங்களும், நெஃப்ராலஜி எனும் சிறப்பு சிறுநீரக மருத்துவரும் இல்லாததால் பலர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர், சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பட்டனர். அதில், பலர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உயர் அதிகாரிகள் கூறுகையில், ”கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி திறந்து 2 ஆண்டுகளே ஆகிறது. 5 ஆண்டுகள் ஆன பின்னர் தான் ஹீமோ டயாலிஸ் இயந்திரமும், நெஃப்ராலஜிக்கான சிறப்பு சிறுநீரக மருத்துவப் பேராசிரியரும் நியமிக்கப்படுவர். அதனால் தான், தற்போது பாதிக்கப்பட்ட பலர் ஜிப்மர் உள்ளிட்ட வேறு மாவட்ட மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்” என்று விளக்கம் அளித்தனர்.