’எத்தனையோ முறை சொல்லியும் கேட்கல’..!! இத்தனை கிராமங்களா..? ஒருத்தரும் ஓட்டுப் போடலையாம்..!!
எத்தனையோ முறை சொல்லியும், தங்களது கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி, பல்வேறு கிராம மக்கள் கோபமாக இருக்கின்றனர். தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த, இந்த தேர்தலை புறக்கணித்துள்ளனர். கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்டது வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி. இங்கு கடவரஅள்ளி என்ற கிராமம் உள்ளது. வழக்கம்போல் காலை 7 மணிக்கே இங்குள்ள வாக்குச்சாவடிகள் தயாரானது.
ஆனால், ஒருத்தர்கூட வாக்களிக்க வரவில்லை. காலை 10 மணி வரை இந்த கடவரஅள்ளி கிராமத்தில் இருந்து யாருமே வாக்களிக்க வரவில்லை. இதற்கு காரணம், இந்த கடவரஅள்ளி கிராமமானது காட்டுப்பகுதியை ஒட்டியுள்ளது. 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றன. அந்தவகையில், கிட்டத்தட்ட 450 வாக்காளர்கள் இருக்கின்றனர். ஆனால், இவர்கள் இந்த பகுதியில், வீட்டுமனை பட்டா வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்து வருகிறார்களாம். அதிகாரிகள் யாருமே நடவடிக்கை எடுக்காததால், தேர்தலை புறக்கணிப்பதாக கூறுகின்றனர்.
இதுபோலவே, 1050 வாக்காளர்களை கொண்ட கருக்கனஅள்ளி கிராம மக்களும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இங்கே 4 வழிச்சாலை பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. சாலையை கடப்பதற்கு மேம்பாலம் கேட்டார்களாம். அதையும் அதிகாரிகள் அமைத்து தரவில்லை என்பதால் வாக்களிக்கவில்லை என்கிறார்கள். தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கச்சுவாடி கிராமத்திலும் 961 பேர் வாக்காளர்கள், யாரும் வாக்களிக்க செல்லவில்லை. இவர்களும் சாலை வசதி கோரி விண்ணப்பித்து எந்த பலனும் இல்லை.
இந்த லிஸ்ட்டில் வேங்கைவயல் கிராமத்தையும் சேர்த்து கொள்ளலாம். தமிழகத்தையே உலுக்கிப்போட்டது இந்த வேங்கைவயல் கிராமம். குடிக்கும் தண்ணீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது. பல கட்ட விசாரணைகள் நடந்தாகிவிட்டது. ஆனால், இன்னும் ஒருவர் கூட பிடிபடவில்லை. வேங்கைவயல் கிராம மக்கள் யாருமே வாக்களிக்க போகவில்லை. இத்தனைக்கும் இந்த வாக்குச்சாவடியை பதற்றமான வாக்குச் சாவடியாக கணக்கில் கொண்டு, துணை ராணுவமே பாதுகாப்புக்காக வந்து இறங்கியது. 549 வாக்காளர்கள் இருந்தும்கூட, யாரும் வாக்களிக்கவில்லை. மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் எப்போதுதான் நடவடிக்கை எடுப்பீர்கள்? என்று ஆதங்கத்துடன் கேட்கிறார்கள் வேங்கைவயல் மக்கள்.
Read More : ஹிந்தியில் பேட்டி கேட்ட பத்திரிகையாளர்..!! சீமான் கொடுத்த ரியாக்ஷன்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!