”தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை”..!! வெளியான அதிர்ச்சி சர்வே முடிவுகள்..!!
கடந்த 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை இந்திய மக்களிடையே குறைந்துவிட்டதாக சிஎஸ்டிஎஸ் நடத்திய சர்வே முடிவுகளில் தெரியவந்துள்ளது.
நாட்டில் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் இந்த லோக்சபா தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த லோக்சபா தேர்தல் தொடர்பாக பல்வேறு சர்வே நடத்தப்பட்டு, அது குறித்த முடிவுகள் வெளியாகி வருகிறது. இதற்கிடையே, சிஎஸ்டிஎஸ் என்ற அமைப்பு நடத்திய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, இதில் தேர்தல் ஆணையம் குறித்தும் சில கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. 2019 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில், சுமார் 50% வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தின் மீது அதிக நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தனர். ஆனால், இந்த முறை வெறும் 28 சதவீதம் பேர் மட்டுமே முழு நம்பிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதேநேரம் ஓரளவுக்கு நம்பிக்கை இருப்பதாகக் கூறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த 2019 தேர்தலுக்குப் பிறகு சுமார் 27% பேர் ஓரளவுக்கு நம்பிக்கை இருப்பதாகக் கூறியிருந்த நிலையில், இப்போது 2024இல் அது 30%ஆக அதிகரித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீது பெரியளவில் நம்பிக்கை இல்லை என்று கூறுவோரின் விகிதம் 2019இல் 7%ஆக இருந்த நிலையில், இப்போது அது 14%ஆக அதிகரித்துள்ளது. அதேபோல சுத்தமாக நம்பிக்கையே இல்லை எனக் கூறுவோரின் எண்ணிக்கையும் 5 ஆண்டுகளில் 5%இல் இருந்து 9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
காரணம் என்ன..? தேர்தல் ஆணையத்தின் மீது மட்டுமின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதும் வாக்காளர்களுக்குக் கணிசமாகச் சந்தேகம் இருக்கவே செய்கிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆளும் தரப்புக்குச் சாதமாக மாற்ற அதிக வாய்ப்பு இருப்பதாக 17 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இதற்கு ஓரளவுக்கு வாய்ப்பு இருப்பதாக 28 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். 27 சதவீதம் பேர் மட்டுமே வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர்.
இதில் மத்திய பாஜக அரசு விசாரணை ஏஜென்சிக்களை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்துவதாக நினைக்கிறீர்களா என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. இதற்கு மக்களின் பதில் இரு வேறாக இருந்துள்ளது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்பை அரசியல் பழிவாங்கல்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாக 35% பேர் தெரிவித்துள்ளனர். அதேநேரம் 31% பேர் விசாரணை அமைப்புகள் சட்டப்படியே செயல்படுவதாகக் கூறியுள்ளனர். லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் இணைந்து நடத்திய இந்த சர்வே நாடு முழுக்க உள்ள 100 நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள 100 சட்டமன்றத் தொகுதிகளில் நடத்தப்பட்டதாகும்.
Read More : தனது பாணியில் அண்ணாமலையை வறுத்தெடுத்த மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ..!! அவர் ஒரு சுஜுபி..!!