யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு புதிய ஆப்பு..!! இனி 4 மணி நேரம்..!! மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு..!!
ஆன்லைன் பேமெண்ட் மோசடிகளை தடுக்க, இரண்டு நபர்களுக்கு இடையே முதல் முறையாக நடக்கும் யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதாவது நீங்கள் நேரடியாக ஒரு நபருக்கு 2,000 ரூபாய்க்கு மேல் முதல் முறையாக அனுப்பிவிட முடியாது. அதே சமயம் இது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மட்டும் பொருந்தும். பிஸ்னஸ் கணக்குகளுக்கு பொருந்தாது. அதாவது கடைகளில் நீங்கள் ரூ.10,000-க்கு பொருள் வாங்கினால் அந்த 10 ஆயிரம் ரூபாய்க்கு அப்படியே யுபிஐ மூலமே பணம் செலுத்தலாம்.
ஆனால், உங்களின் புதிய நண்பர் ஒருவர் உங்களிடம் ரூ.3,000 கேட்டார் என்றால், முதலில் ரூ.2,000 மட்டுமே அனுப்ப முடியும். 4 மணி நேரம் கழித்தே மீதம் உள்ள தொகையை அனுப்ப முடியும். உங்கள் கணக்கில் இருந்து மோசடியாளார்கள் பணம் திருடுவதை தடுக்க வேண்டும் என்பதற்காக இத்திட்டம் தற்போது கையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் சில சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இணையப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
இந்த புதிய விதி இறுதி செய்யப்பட்டால், உடனடி கட்டணச் சேவை, ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டண இடைமுகம் ஆகியவற்றின் மூலம் பாதுகாப்பான டிஜிட்டல் பேமெண்ட்டுகளை எளிதாக செய்ய முடியும். இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாகவே வங்கிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதற்கு சிறிய அளவிலான சேவை வரிகளும் கூட விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட அளவிலான பரிவர்த்தனைக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்தால், வங்கியில் இருந்து அதற்கான பிடித்தம் செய்யப்படுகிறது.
இந்நிலையில்தான் தற்போது வணிக பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளது. யுபிஐ மூலம் பிபிஐ மோடில் வணிக பரிவர்த்தனைக்கு பணம் அனுப்பினால் கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.2,000 மேல் பிபிஐ முறையில் பணம் அனுப்பினால் இந்த கட்டணம் பொருந்தும். அதன்படி, வணிக பரிவர்த்தனைக்கு ஒரு கடைக்காரர் ப்ரீபெய்டு முறையில்.. அதாவது வாலட் முறையில் பணம் செலுத்தினாலோ, ப்ரீபெய்டு கார்ட் முறையில் பணம் செலுத்தினாலோ அதற்காக 0.5 சதவிகிதம் முதல் 1.1 சதவிகிதம் வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
மக்கள் சிலர் இப்போது வாலட் மூலம் கட்டணம் செலுத்துகின்றனர். இந்த வாலட் மூலம் செலுத்தப்படும் கட்டணங்களுக்கு அதிகபட்சம் 1.1% வரை கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துறை ரீதியாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு இந்த கட்டணம் சதவிகிதம் மாறும். எரிபொருளுக்கு 0.5%, தொலைத்தொடர்பு, அஞ்சல், கல்வி, விவசாயம் 0.7%, பல்பொருள் அங்காடிக்கு 0.9%, Mutual Fund, அரசு, காப்பீடு, ரயில்வேக்கு 1% ஆக கட்டணம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.