மின்வெட்டு குறித்து முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டுமா..? அப்படினா உடனே இதை பண்ணுங்க..!!
தமிழ்நாட்டில் மின்வெட்டு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. மாதந்தோறும் ஒரு நாளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வெட்டானது இருந்து வருகிறது. பராமரிப்பு பணி காரணமாக ஒவ்வொரு பகுதியிலும் சுழற்சி முறையில் இந்த மின்வெட்டு செய்யப்படுகிறது. இதுபோன்று திட்டமிடப்படும் மின்வெட்டு குறித்து முன்னரே அறிவிக்கப்படுவது வழக்கம். அதற்கு ஏற்றார்போல் தொழில்நிறுவனங்கள், பொதுமக்கள் மின்வெட்டு நாளுக்கு ஏற்றார் போல் தங்களது வழக்கமான பணியில் பாதிப்பு ஏற்படாதவாறு முன்னரே திட்டமிட்டு கொள்வார்கள்.
சில சமயங்களில் அறிவிக்கப்பட்ட பகுதி தவிர பிற இடங்களில் மின் துண்டிப்பு செய்யப்படுகிறது. இந்த திடீர் மின்வெட்டு அன்றாட பணிகளை பாதிப்படைய செய்வதுடன் சிரமத்தையும் ஏற்டுத்துகிறது. இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்கும் வண்ணம் திட்டமிடப்பட்ட மின் நிறுத்த பகுதி குறித்து முன்பே தெரிந்துகொள்ளும் விதமாக தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml என்ற இணையதளத்தில் உங்கள் சரகத்தை தேர்வு செய்தால், எந்தெந்த பகுதிகளில் மின்நிறுத்தம் என்பது காண்பிக்கப்படும். இதன்மூலம் பொதுமக்கள் தங்களது பகுதியில் மின்நிறுத்தம் எப்போது உள்ளது என்பதை அறிந்துகொண்டு அதற்கு ஏற்ப பணிகளை மேற்கொள்ளலாம்.
மேலும், இந்த இணையதளம் மூலம் திட்டமிடப்பட்ட மின்நிறுத்தம் பற்றிய தகவல்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். திடீர் மின்நிறுத்தம் பற்றிய தகவல்களை அந்தந்த பகுதியின் மின்சார வாரியத்தை தொடர்பு கொண்டு விவரத்தை கேட்டு கொள்ளலாம்.