UPI பயனர்களைக் குறிவைக்கும் புதிய ‘ஜம்ப்ட் டெபாசிட் மோசடி’: உங்கள் பணத்தை எப்படி பாதுகாப்பது..?
இந்த டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் பண பரிவர்த்தனை பன்மடங்கு பெருகிவிட்டது. UPI, இண்டெர்நெட் பேங்கிங் போன்ற பணப் பரிவர்த்தனை முறைகள் பயனர்களுக்கு மிகவும் வசதியானதாக இருந்தாலும் அதில் ஆபத்துகளும் அதிகமாக உள்ளன. ஏனெனில் சைபர் குற்றவாளிகள் பல்வேறு நூதன வழிகள் மூலம் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.
அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகள் குறித்து வங்கிகளும், காவல்துறையினரும் தொடர்ந்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் இந்த மோசடிகள் குறைந்தபாடில்லை. அந்த வகையில் தற்போது ஒரு புதிய மோசடி அரங்கேறி வருகிறது. இது 'ஜம்ப்ட் டெபாசிட் ஸ்கேம்' (Jumped Deposit Scam) என அழைக்கப்படுகிறது. இந்த மோசடியில், சைபர் குற்றவாளிகள் முதலில் உங்கள் நம்பிக்கையைப் பெற உங்கள் கணக்கில் மிகக் குறைந்த அளவிலான பணத்தை டெபாசிட் செய்வார்கள். பின்னர் தவறாக பணம் அனுப்பிவிட்டதாக கூறி அதிக பணத்தை கொள்ளை அடிக்கின்றனர்.
இந்த மோசடி குறித்து தமிழக காவல்துறை சமீபத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது. இந்த மோசடி எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், மோசடியில் இருந்து எப்படி உங்களை பாதுகாத்துக் கொள்வது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இந்த மோசடி எப்படி நடைபெறுகிறது?
மோசடி செய்பவர்கள் UPI மூலம் முதலில் ஒருவரின் வங்கிக் கணக்கில் சிறிய அளவு தொகையை டெபாசிட் செய்வார்கள். பின்னர் அவர்கள் அந்த நபரை அழைத்து, அதிக தொகையைத் திருப்பித் தர வேண்டும் என்ற கோரிக்கை வைக்கின்றனர். இதனால் தங்கள் UPI செயலியைத் திறந்து, அந்தத் தொகை டெபாசிட் செய்யப்பட்டதா என்பதைச் சரிபார்த்து, PIN-ஐ உள்ளிடும்போது, சைபர் கிரிமினல்கள் பணம் செலுத்த கோரி போலியான கோரிக்கையை அனுப்புவார்கள்.
அப்போது PIN எண்ணை உள்ளிடுவதன் மூலம், சம்மந்தப்பட்ட நபர் மோசடியான பரிவர்த்தனையை அங்கீகரிக்கிறார். அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து அவர்களுக்கு தெரியாமலே பணம் மாற்றப்படுகிறது.
அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்?
தேசிய சைபர் கிரைம் அறிக்கையிடல் போர்ட்டலில் தினமும் வழக்குகள் பதிவாகி வருவதாகவும், தமிழ்நாடு காவல்துறை இந்த மோசடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. எனவே சந்தேகத்திற்கிடமான ஆதாரங்களில் இருந்து பணம் பெற்றால் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?
உங்கள் இருப்பைச் சரிபார்ப்பதில் தாமதம்: எதிர்பாராத வைப்புத்தொகைக்குப் பிறகு, உங்கள் பேலன்ஸை சரிபார்க்கும் முன் குறைந்தபட்சம் 15-30 நிமிடங்கள் காத்திருக்கவும். இந்த காலத்திற்குப் பிறகு பெரும்பாலான மோசடி கோரிக்கைகள் செல்லாது.
தவறான பின்னைப் பயன்படுத்தவும்: உங்கள் பேலன்ஸை உடனடியாகச் சரிபார்க்க விரும்பினால், உங்கள் வழக்கமான ஒன்றிலிருந்து சற்று வித்தியாசமான பின்னை உள்ளிடவும், இதனால் அனுப்பப்படும் எந்த போலி கோரிக்கைகளும் தோல்வியடையும்.
பதிலளிக்க வேண்டாம் : தெரியாத நபர்கள் பணம் கோரி கோரிக்கை அனுப்பினால் அதற்கு பதிலளிக்க வேண்டாம். உங்கள் UPI பின்னைப் பகிர வேண்டாம்.
எனவே சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை நீங்கள் சந்தித்தால், உடனடியாக சைபர் கிரைம் போர்ட்டலில் புகாரளிக்கவும். இது, உங்கள் பணத்தை பாதுகாக்கவும், மோசடி செய்பவர்களைக் கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உதவும்.