பெண் ஆளுமைக்கான புதிய "சக்தி விருதுகள் 2024"..!! நாளை பிரம்மாண்ட ஏற்பாடு..!!
தமிழகத்தின் செய்தி செய்தி நிறுவனங்களில் ஒன்றான புதிய தலைமுறை செய்தி நிறுவனம், சாதனை தமிழர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு விருது நிகழ்ச்சிகள் மூலம் வழங்கி வருகிறது. தமிழன் விருதுகள், சக்தி விருதுகள், ஆசிரியர் விருதுகள் என வழங்கி வருகிறது.
சக்தி விருதுகளானது, ஆண்டு தோறும் மகளிர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதங்களில் பிரமாண்டமாக நடத்தப்பட்டு, மார்ச் 8ஆம் தேதி ஒளிபரப்பு செய்யப்படும். கொரோனா காலமான 2021, 2022 ஆகிய ஆண்டுகளை தவிர்த்து கடந்த 2023ஆம் ஆண்டு 10-வது சக்தி விருதுகள் வழங்கும் விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ‘சக்தி விருதுகள் 2024’ விழா நாளை (பிப்.17) நடைபெறவுள்ளது.
சமூகம் தளைக்க பெண்கள் ஆற்றும் பங்கினை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் வகையில் 6 பிரிவுகளில் சிறந்து விளங்கும் பெண் ஆளுமைகளுக்கு சக்தி விருதுகள் (Sakthi Awards) வழங்கப்பட்டு வருகின்றன. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண் ஆளுமைகளுக்கான பரிந்துரைகள் நடுவர் குழுவினரால் ஆராய்ந்து அதில் இருந்து சிறந்தவர்கள் ஒவ்வொரு ஆண்டுக்கான விருதாளர்களாள தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்தாண்டு பிப்ரவரி 17ஆம் தேதியான நாளை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மைய வளாகத்தில் மாலை 6 மணியளவில் இந்த விழா நடைபெறவுள்ளது. நாளை நடைபெறும் நிகழ்ச்சியானது, மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.