For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புற்றுநோய் சிகிச்சைக்காக புதிய மாத்திரை கண்டுபிடிப்பு! விலை எவ்வளவு தெரியுமா?

08:33 PM Mar 30, 2024 IST | Baskar
புற்றுநோய் சிகிச்சைக்காக புதிய மாத்திரை கண்டுபிடிப்பு  விலை எவ்வளவு தெரியுமா
Advertisement

புற்றுநோய் உண்டாவதற்கான ஐந்து முக்கிய காரணிகள், புகையிலைப் பொருட்களை உட்கொள்வது, மது அருந்தும் பழக்கம், அதிக உடல் எடையுடன் இருப்பது, குறைந்த அளவில் பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது உடல் உழைப்பு இல்லாமை ஆகியவையாகும்.

Advertisement

உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 22% பேரின் பாதிப்புக்கு காரணமாக இருப்பது புகையிலை மட்டுமே. அது புகைப் பிடித்தல் மட்டுமல்ல. வேறு எந்த வகையில் புகையிலைப் பொருட்களை உட்கொண்டாலும் புற்றுநோய் வர வாய்ப்புண்டு. குறிப்பாக நுரையீரல், கல்லீரல், பெருங்குடல், வயிறு மற்றும் மார்பகம் ஆகிய உறுப்புகளிலேயே பெரும்பாலும் புற்றுநோய் உண்டாகிறது.

புற்றுநோயாளிகளுக்கு கீமோதெரபி, ரேடியோதெரபி போன்ற சிகிச்சைகள் வழங்கப்பட்ட பிறகும் மீண்டும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மாத்திரை இரண்டாவது முறை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைத்துவிடும். உலகில் ஆறு நொடிக்கு ஒரு நபரின் மரணத்துக்கு காரணமாக இருப்பது புகையிலையால் உண்டாகும் நோய்களே என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

இந்த சூழ்நிலையில், மும்பையைச் சேர்ந்த டாடா புற்றுநோய் நிறுவனத்தில் புற்றுநோய் சிகிச்சைக்காக புதிய மாத்திரை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு, மீண்டும் இரண்டாவதாகப் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுப்பதற்கு இந்த மாத்திரை பெரிதும் உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சிகிச்சையின்போது அழியும் புற்றுநோய் செல்கள் குரோமேடின் (Chromatin) என்னும் நுண்துகள்களை வெளியேற்றும். அந்தத் துகள்கள் உடலின் மற்ற பகுதிகளுக்குச் சென்று மீண்டும் புற்றுநோயை உண்டாக்கும். இதற்கு ஒரு தீர்வாகவே இந்த மாத்திரை செயல்படும். இந்த மாத்திரையில் உள்ள ரிசர்வெட்ரால் (Resveratrol) என்ற வேதிப்பொருள் மற்றும் காப்பர் (R+Cu) போன்றவை குரோமேடின்களை அழிக்கின்றன.

சோதனைக்காக எலியின் உடலில் செலுத்தப்பட்டபோது குரோமேடின்களை அழிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம் கீமோதெரபியால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் குறைக்கலாம். இந்த மாத்திரையை உட்கொள்ளும்போது அவை வேகமாக ரத்தத்தில் கலந்து உடனடியாகச் செயல்படத் தொடங்குகிறது.‘

ஏழை, எளிய மக்களும் இந்த புற்றுநோய் சிகிச்சை மாத்திரை வாங்கும் நோக்கில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்ய டாடா புற்றுநோய் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாத்திரை மீண்டும் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை 30 சதவிகிதம் குறைப்பதோடு, பக்கவிளைவுகளை 50 சதவிகிதம் வரை குறைக்கும் என கூறப்படுகிறது. தற்போது இந்த மாத்திரை இந்திய உணவுத் தரம் மற்றும் பாதுகாப்புக் கழகத்தின் (FSSAI) ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement