ஆசையாக தல தீபாவளி கொண்டாட வந்த புதுமணப்பெண்..!! ஓட ஓட விரட்டி படுகொலை..!! தூத்துக்குடியில் அதிர்ச்சி..!!
உடன்குடியில் தல தீபாவளிக்கு வந்த புதுமணப்பெண் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சாதரக்கோன்விளையைச் சேர்ந்தவர் சிவன். இவருடைய மகன் கோவிந்தன் (21). இவர், நேற்று முன்தினம் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, வாலிபர் ஒருவர் தனது நண்பரை பார்ப்பதற்காக சாதரக்கோன்விளைக்கு வந்து கோவிந்தனிடம் முகவரி கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
முகவரி கேட்ட வாலிபரை கோவிந்தன் சத்தம் போட்டு விரட்டியடித்துள்ளார். இதையடுத்து, அந்த வாலிபர் தனது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோருடன் கோவிந்தனின் வீட்டுக்கு சென்றனர். அப்போது கோவிந்தன் வீட்டில் இல்லை. அவருடைய குடும்பத்தினர் மட்டுமே இருந்துள்ளனர். இதனால், அவர்கள் திரும்பி சென்றனர்.
தொடர்ந்து நேற்று காலையில் மீண்டும் சாதரக்கோன்விளைக்கு வந்தனர். அப்போது சாதரக்கோன்விளையைச் சேர்ந்த போர்வெல் அமைக்கும் தொழில் செய்து வரும் பெருமாள் மகன் மணிகண்டனை (40) சமரசம் பேசுவதற்காக அழைத்து வந்தனர். கோவிந்தன், அவருடைய தந்தை சிவன் ஆகியோரை வரவழைத்து மணிகண்டன் சமரசம் பேசினார். அப்போது ஏற்பட்ட தகராறில் மணிகண்டன், சிவனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தன் வீட்டிற்குச் சென்று அரிவாளை எடுத்து வந்து மணிகண்டனை வெட்டியுள்ளார். இதனால் சமரசம் பேச வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். படுகாயமடைந்த மணிகண்டனை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கோவிந்தன், சிவன் ஆகியோர் குலசேகரன்பட்டினம் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். கோவிந்தனை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் கோவிந்தனின் தங்கை முத்துலட்சுமிக்கும் (19), அழகப்பபுரத்தை சேர்ந்த வெயிலுமுத்துவுக்கும் திருமணம் நடந்தது. தல தீபாவளி கொண்டாடுவதற்காக முத்துலட்சுமி கணவருடன் சாதரக்கோன்விளையில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் விநியோகம் செய்வதற்காக முத்துலட்சுமி சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மணிகண்டனின் தம்பியான தாஸ் என்ற வாலிபர் முத்துலட்சுமியை ஓட ஓட விரட்டி கத்தியால் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துலட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே முத்துலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தாஸை வலைவீசி தேடி வருகின்றனர். தலை தீபாவளி கொண்டாட வந்த புதுமணப்பெண் கொடூரமாக குத்திக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.