நள்ளிரவில் ஆடிப்போன நேபாளம்..!! பலி எண்ணிக்கை 70ஆக உயர்வு..!! மேலும் உயரும் அபாயம்..!!
நேபாளத்தின் வடமேற்கு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க புவியியல் மையம், நிலடுக்கம் முதற்கட்ட அளவில் 5.6 ரிக்டர் பதிவானதாகவும், 11 மைல் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. அதன்பின் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் நிலநடுக்கம் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி தேசிய மையம், நேபாளம் தலைநகர் காத்மாண்டில் இருந்து 250 மைல் தூரத்தில் உள்ள ஜாஜர்கோட், நிலநடுக்கத்தின் மையப்புள்ளியாக இருந்தது என தெரிவித்துள்ளது.
ருகும் மாவட்டத்தில் குறைந்தது 35 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜாகர்கோட் மாவட்டத்தில் 34 பேர் உயிரிழந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்னர். தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், மின்சாரம் இல்லாததால் மீட்புப்பணியில் தடை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பல இடங்களில நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட இடத்தை நெருங்க முடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். டெல்லியில இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால், டெல்லி வாசிகள் லோசான அதிர்வை உணர்ந்தனர்.