உங்கள் நிலத்தில் வேலை செய்ய 100 நாள் திட்ட பணியாளர்கள் வேண்டுமா? எப்படி விண்ணப்பிக்கலாம்..?
100 நாள் வேலைத் திட்டம் என்பது, கிராமப்புறங்களில் குறைந்தபட்சம் 100 நாட்கள் கூலி வேலையை அளிப்பது என்ற அளவிலேயே நாம் எடுத்துக் கொள்கிறோம். ஆனால், இந்த திட்டத்தின் கீழ், 100 நாள் அட்டைதாரர்கள் தங்களுக்கு தேவையான பாசன வசதி, மரம் நடுதல், தோட்டக்கலை செய்வது, ஆழ்துளை கிணறு வெட்டுவது, மீன் வளர்க்கும் குளங்களை அமைப்பது, வீடு கட்டுவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடலாம். இதன் மூலம், தங்கள் தனிப்பட்ட குடும்ப வருமானத்தை அதிகரித்து கொள்ள முடியும்.
கிராமப்புற வறுமை ஒழிப்புக்காக மத்திய அரசு கடந்த 2005ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (MGNREGA) இயற்றியது. ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அவர்களுக்கு 100 நாள் வேலை அளிக்கப்படும். 100 நாட்கள் வேலை தர அரசு (பஞ்சாயத்து அமைப்புகள்) தவறினால், பாதிக்கப்பட்டவருக்கு முதல் 30 நாட்களுக்கு சம்பளத்தில் கால் பங்கும், மேலும் தவறினால் பாதி ஊதியத்தை அபராதமாக அரசு செலுத்த வேண்டும்.
முன்னதாக, இந்த திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில், கிராமப்புறங்களில் இருக்கும் வாய்க்கால்களையும், ஆறுகளையும் தூர் வாருவது, குளங்களை தூர் வாருவது, சாலை வசதிகளை அமைப்பது போன்ற பணிகளின் கீழ் அதிக வேலைநாட்கள் உருவாக்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந்த போக்கை முற்றிலும் மாற்றி அமைத்தது. 100 நாள் வேலை அட்டை வைத்திருப்பவர்களை அதிகபட்சம் பொது சொத்தில் இருந்து தனிநபர் நிலத்தில் பணியாற்ற அதிகம் ஊக்கமளித்து.
வேலை உறுதி சட்டத்தின் கீழ் 100 நாள் வேலை அட்டை உள்ள பட்டியல் இனத்தவர், பட்டியல் பழங்குடியினர், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள், மத்திய அரசின் கிராமப்புற வீட்டு வசதி திட்ட பயனாளிகள், மாற்றுத் திறனாளிகள், பெண் தலைமையிலான குடும்பங்கள், நில சீர்திருத்தத்தின் பயனாளிகள், 2008இல் விவசாய கடன் ரத்து திட்டத்தின் பயனாளிகள் குடும்பங்களுக்கு பாசன வசதி, மரம் நடுதல், தோட்டக்கலை சாகுபடி மற்றும் நிலம் மேம்பாடு செய்து கொடுக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தனிநபர் நில மேம்பாடு பணிகளின் கீழ், வீட்டு வசதி திடத்தின் கீழ் 80% பணிகள் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம், ராஜஸ்தான் மாநிலம் 62% பணிகளை வறட்சித் தடுப்பு மற்றும் நீர் பாசன வேலைகளில் ஈடுபடுத்தி வருகிறது. 100 நாள் வேலை திட்ட அட்டைத்தாரர்கள் மட்டுமே, தங்களுக்கு உரிமையான நிலத்தில் 100 நாள் பணியாளர்களை பணி அமர்த்த கோர முடியும்.
மேலும், அவர் நடக்கும் திட்ட வேலையில் கட்டாயம் பங்கு கொள்ள வேண்டும். மேலும், இந்த திட்டத்தில் ஒப்பந்ததாரரையோ, இயந்திரங்களையோ பயன்படுத்தக் கூடாது. கிராம சபைக் கூட்டத்தில், உங்கள் நிலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தெரிவிக்க வேண்டும். உங்களது திட்டம் கிராம சபையாலும், கிராம ஊராட்சியாலும் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.