"அனைத்து மதங்களும் சமம்.. இது அனைவருக்குமான ஆட்சி!!" - மோடி பேச்சு..
தேசிய ஜனநாயகக் கூட்டணி சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்கு வங்கி அதிகரித்திருப்பதே உதாரணம் என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் முன்மொழிய, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் வழிமொழிந்தனர். கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் மற்றும் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல தலைவர்களும் பங்கேற்று, மோடியை மீண்டும் பிரதமராக்க ஆதரவளித்தனர். அதனடிப்படையில், பாஜக கூட்டணியின் பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட்டதாக ஜே.பி. நட்டா அறிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “நாங்கள் தோற்கவில்லை, தோற்கவும் மாட்டோம். தேசிய ஜனநாயக கூட்டணிக்குக் கிடைத்திருப்பது சாதாரண வெற்றியல்ல. நாங்கள் தோற்றுவிட்டதாக எதிர்க்கட்சிகள் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. கடந்த 4-ம் தேதிக்கு முன்பே, ஒரு சிறுவனிடம், யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று கேட்டால்கூட, அவர் தேசிய ஜனநாயக கூட்டணிதான் என்று சொல்வார்.
இந்த தேர்தலில் வென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலுக்கு முன்பே, உருவான கூட்டணி, தேர்தலில் வெற்றிபெற்று, இப்படி ஒரு கூட்டணி ஆட்சியை அமைப்பது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. கடந்த 30 ஆண்டுகளில், தற்போது உருவான தேசிய ஜனநாயக கூட்டணியே வலிமையானது. அனைத்து விவகாரங்களிலும் ஒருமித்த முடிவை எட்டுவதே எங்கள் கூட்டணியின் நோக்கம்.
வருங்காலங்களில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் இருந்து எம்.பி.க்கள் கிடைக்காத போதும், வாக்கு விகிதம் அதிகரித்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்கு வங்கி அதிகரித்திருப்பதே உதாரணம். தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் பாஜகவின் வாக்கு விகிதம் அதிகரித்திருக்கிறது.
அனைவருக்குமான ஆட்சியை நடத்துவது என்பதில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதி பூண்டுள்ளது. அரசை நடத்துவதற்கு ஒருமித்த கருத்துதான் முக்கியம், பெரும்பான்மை அல்ல. அரசு எப்படி நடக்கிறது? எதனால் நடக்கிறது? என்பதெல்லாம் மக்களுக்கு இப்போதுதான் தெரிகிறது” என்று பிரதமர் மோடி பேசினார்.
Read more ; பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த தேதியில் விடுமுறை அறிவிப்பு..!! மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!