தேசிய ஒலிபரப்புக் கொள்கை 2024...! பரிந்துரைகளை கேட்கும் மத்திய அரசு...!
தேசிய ஒலிபரப்புக் கொள்கை 2024-ஐ உருவாக்குவதற்கான உள்ளீடுகள்’ குறித்த பரிந்துரைகளை இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) வெளியிட்டுள்ளது. அதன்படி, தேசிய ஒலிபரப்புக் கொள்கையை உருவாக்குவதற்கு ட்ராய் சட்டம், 1997 பிரிவு 11-ன் கீழ் உள்ளீடுகளை வழங்குமாறு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் 2023 ஜூலை 13 தேதியிட்ட கடிதத்தில் ட்ராய் அமைப்பை கேட்டுக்கொண்டது.
இதன் முதல் நடவடிக்கையாக 2023 செப்டம்பர் 21 அன்று ஆலோசனைக்கு முந்தைய அறிக்கை ஒன்றை வெளியிட்ட ட்ராய் அமைப்பு, வெளியிலிருந்து ஆலோசனைகளைப் பெறுவதற்கு 2024 ஏப்ரல் 2 அன்று ‘தேசிய ஒலிபரப்புக் கொள்கை 2024-ஐ உருவாக்குவதற்கான உள்ளீடுகள்’ குறித்த ஆலோசனை அறிக்கையை வெளியிட்டது. இதன் மீது சேவை வழங்குவோர், அமைப்புகள், தொழில்துறை சங்கங்கள், நுகர்வோர் ஆதரவுக் குழுக்கள், சில தனிநபர்கள் உட்பட 42 பங்குதாரர்களிடமிருந்து ட்ராய் அமைப்புக்கு கருத்துகள் வரப்பெற்றன.
இதையடுத்து 2024 மே 15 அன்று திறந்த நிலை விவாதம் நடத்தப்பட்டது. ஏற்கனவே பெறப்பட்ட கருத்துக்களுடன் இந்த விவாதத்தில் வந்த கருத்துக்களையும் ஆய்வு செய்து உரிய முறையில் பரிசீலித்து அரசுக்கு பரிந்துரைகளைத் தற்போது அனுப்பியுள்ளது. ஒலிபரப்புத்துறையில், இந்தியாவை உலகளாவியத் தலைவராக நிறுவும் முயற்சியைக் கொண்ட இந்தக் கொள்கை அடுத்த 5 ஆண்டுகளில் சிறப்பு கவனம் செலுத்துவதோடு பத்து ஆண்டுகளுக்கான விரிவான திட்ட இலக்கைக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு இலக்கையும் அடைவதற்கான உத்திகளும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விவரங்கள் ட்ராய் அமைப்பின் www.trai.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கும். மேலும் விளக்கங்கள் மற்றும் தகவல்களுக்கு advbcs-2@trai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் அல்லது 91-11-20907774 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.