உஷார்...! மீண்டும் குழந்தைகளிடையே பரவும் மர்ம காய்ச்சல்...! இது தான் முக்கிய அறிகுறிகள்...!
சீனாவில் குழந்தைகளிடையே மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலையில், பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்யும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் மற்றும் நோய் தடுப்பு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று காணொளி காட்சி வாயிலாக அவசர ஆலோசனை மேற்கொண்டனர்.
புளூ காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சனை ஆகியவற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் கண்டறிந்து அவ்வப்போது வழங்கப்பட்டுள்ள சிகிச்சை குறித்தும் இணையதளத்தில் தினசரி பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் போதிய படுக்கைகள், புளூ காய்ச்சலுக்கு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள், மருத்துவ ஆக்ஸிஜன், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், சோதனைக் கருவிகள், ஆக்ஸிஜன் ஆலைகள் மற்றும் வென்டிலேட்டர்களின் செயல்பாடு, சுகாதார வசதிகளில் தொற்று கட்டுப்பாட்டு நடைமுறைகள் போன்ற பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனை தயார்நிலை நடவடிக்கைகளை உடனடியாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிகுறிகள்:
அதிக காய்ச்சல், ஒழுகும் மூக்கு, தொண்டை வலி, தசை வலி, தலைவலி, இருமல், சோர்வாக உணர்தல் போன்றவை இந்த நோய்க்கான மிகவும் பொதுவான அறிகுறிகள் ஆகும். வைரசு பாதிப்பு ஏற்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த அறிகுறிகள் தென்படும். குறைந்தது ஒரு வாரத்திற்கு இந்த அறிகுறிகளுடன் நோயின் தாக்கம் இருக்கும்.