வன விலங்குகள் நடமாட்டம்!… சபரிமலை பக்தர்களுக்கு 'அய்யன்' செயலி அறிமுகம்!
பெருவழிப்பாதை வழியாக சபரிமலை வரும் பக்தர்களுக்கு உதவும் வகையில், கேரள வனத்துறை, 'அய்யன்' என்ற மொபைல் ஆப் அறிமுகம் செய்துள்ளது.
எருமேலியிலிருந்து பம்பை வரும் பெருவழிப்பாதை அடர்ந்த காடுகளுக்குள் அமைந்துள்ளது. வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், வனத்துறை ஊழியர்கள் இந்த பாதையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வர். பக்தர்கள் தங்குவதற்கான இடங்கள் முடிவு செய்யப்பட்டு, அங்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படுகிறது. குறிப்பிட்ட இடங்களை தாண்டினால் பக்தர்கள் அடர்ந்த காடுகளுக்குள் சிக்கி விடுவர் என்பதால், தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இந்த பாதையில் பயணம் செய்ய வேண்டும். இப்பாதையில் பக்தர்களுக்கு உதவ, இந்த ஆண்டு கேரள வனத்துறை, 'அய்யன்' என்ற மொபைல் ஆப் அறிமுகம் செய்துள்ளது.
பாதையில் ஒவ்வொரு இடங்களிலும் கிடைக்கும் சேவைகள், தங்கும் வசதி, மின் வசதி, குடிநீர் கிடைக்கும் இடம் போன்ற முக்கிய விபரங்கள் இந்த ஆப்பில் உள்ளது. பெரியார் புலிகள் சரணாலய மேற்கு மண்டல அலுவலக மேற்பார்வையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து, பக்தர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகள் இதில் இடம் பெற்றுள்ளன. பெருவழிப்பாதை தொடங்கும் அமைக்கப்பட்டுள்ள, 'கியூ ஆர் குறியீடை' ஸ்கேன் செய்தும், ஆப் பதிவிறக்கம் செய்ய முடியும் என, வனத்துறை தெரிவித்து உள்ளது