செக்..! டாஸ்மாக்கில் கூடுதல் பணம்... விரைவில் வருகிறது பில்லிங் முறை...! இரண்டு நாள் பயிற்சி
தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பில்லிங் முறை விரைவில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் மாவட்ட மேலாளர் தலைமையில் இன்று மற்றும் நாளை தாலூகா வாரியாக பயிற்சி வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் மதுபான விற்பனையை அரசே நடத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 5000 கடைகளில் மதுபான விற்பனையானது நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு இடங்களில் புகார்கள் எழுந்தன.
இந்த பிரச்சனையால் டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வருவோர் மற்றும் விற்பனையாளர்கள் இடையே வாக்குவாதம், மோதல் உள்ளிட்ட சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் டாஸ்மாக் கடைகளை மேலும் நவீனமயமாக்குவதோடு கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களுக்கு பில் வழங்கும் முறையை தமிழக அரசு கொண்டுவர முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகளை கணினி மயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பில்லிங் முறை சோதனை அடிப்படையில் கடந்த 3 மாதம் முன்பு செயல்படுத்தப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் கையடக்க ஸ்கேனர் மூலம் ஒவ்வொரு பாட்டிலிலும் உள்ள கலால் வரியுடன் கூடிய லேபிள்களை ஸ்கேன் செய்து பில் ரசீதுகளை வாடிக்கையாளரிடம் வழங்குகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பில்லிங் முறை விரைவில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் மாவட்ட மேலாளர் தலைமையில் இன்று மற்றும் நாளை தாலூகா வாரியாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. மதுபாட்டில்களுக்கு கூடுதல் கட்டணத்தை தடுக்கும் வகையில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது