'தமிழக அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும்' வலியால் துடித்த சிறுவனின் வீடியோவை பகிர்ந்து மோகன் ஜி வேண்டுகோள்!
ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்டு மயக்கம் அடைந்த சிறுவனின் வீடியோவை சமூக வலைதளங்களின் பதிவிட்ட இயக்குநர் மோகன், தமிழக அரசு இதனை உடனே தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இவர் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது பல்வேறு விஷயங்களை பதிவு செய்து வரும் நிலையில் தற்போது குழந்தைகள் மத்தியில் பிரபலமாகி வரும் ஸ்மோக் பிஸ்கட்டினால் ஏற்படும் ஆபத்தை உணர்த்தும் விதமாக ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் ஸ்மோக் பிஸ்கட்டை வாங்கி ஆர்வத்துடன் சாப்பிடுகிறான். பின்பு சிறுவன் மூச்சுவிட சிரமப்பட்டு மயக்கமடையும் அதிர்ச்சி தரும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மேலும், "இது போன்று விற்கும் ஸ்மோக் பிஸ்கட் என்ற திண்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.. குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம் பிடிப்பார்கள்.. அதில் ஊற்றப்படுவது லிக்யூட் நைட்ரஜன். ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கு ஆபத்து.. தமிழக அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும்" என தமிழ்நாடு முதலமைச்சரை டேக் செய்து கோரிக்கை விடுத்துள்ளார்.