ஒரே போட்டியில் பல சாதனைகளை சொந்தமாக்கிய முகமது ஷமி..!! மிரண்டுபோன ஜாம்பவான்கள்..!!
நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 7 விக்கெட்களை சாய்ததன் மூலம் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் ஆகச் சிறந்த பவுலர் என்பதை நிரூபித்திருக்கிறார் முகமது ஷமி. இந்திய அணிக்காக இதுவரை 3 உலகக்கோப்பைகளை விளையாடி இருக்கும் இவர், அசைக்க முடியாத பல சாதனைகளுக்கும் சொந்தக்காரராக மாறியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் அசத்திய ஷமி, 7 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 51 விக்கெட்களை கைப்பற்றி, இந்தியாவின் சிறந்த பவுலராக உருவெடுத்துள்ளார். நடப்பு உலகக்கோப்பை தொடரின் முதல் 4 போட்டிகளில், பிளேயிங் லெவன் அணியில் இடம்பெறாத நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் தான் முகமது ஷமி, இந்திய அணிக்குள் வந்தார். அப்போது முதல் ஷமியின் ருத்ரதாண்டவம், எதிரணி பேட்ஸ்மென்களை திணறடித்து வருகிறது.
இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள ஷமி, நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய 7 விக்கெட்களுடன் சேர்த்து, மொத்தம் 23 விக்கெட்களை வீழ்த்தி, நடப்பு உலகக்கோப்பை தொடரில் Highest விக்கெட் Taker ஆக உருவெடுத்துள்ளார். லீக் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக ஏற்கனவே 5 விக்கெட் வீழ்த்திய ஷமி, இங்கிலாந்துக்கு எதிராக 4 விக்கெட், இலங்கைக்கு எதிராக 5 விக்கெட், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் 4 முறை ஐந்து விக்கெட் மற்றும் அதற்கு மேல் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முகமது ஷமி, முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டார்க்கின் சாதனையை அவர் முறியடித்திருக்கிறார். மேலும், 17 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி 50 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியதன் மூலம், Fastest 50 விக்கெட் என்ற மைல் கல் சாதனையையும், மிச்செல் ஸ்டார்க் வசம் இருந்து ஷமி பறித்திருக்கிறார்.