வசமாக சிக்கிய அமைச்சர் பொன்முடி மகன்..!! நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக உள்ள பொன்முடி கடந்த 2006 - 2011ஆம் ஆண்டுகளில், அரசின் கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, விழுப்புரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்ததாக புகார் எழுந்தது. அதன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறையும் வழக்குப்பதிந்தது. அந்தத் தொகையை சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனை செய்ததாக, எம்.பி கவுதம சிகாமணி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில், வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எம்.பி., கவுதம சிகாமணி, கே.எஸ்.ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே.சதானந்தம், கோபிநாத் ஆகியோர் நவம்பர் 24ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பிய நீதிபதி, விசாரணையை வரும் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.