புதிய மதுவிலக்கு திருத்தச் சட்டம் சொல்வது என்ன? முழு விவரம் இதோ!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, அதிமுக, பாமக போன்ற எதிர்க்கட்சிகள் தமிழ்நாடு அரசை விமர்சித்தன. சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதங்களின் போது அதிமுக வெளிநடப்பும் செய்தது. அதேவேளை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிக் கட்சிகள் போன்ற திமுக-வின் கூட்டணிக் கட்சிகளே அரசுக்கு கண்டனத்தைப் பதிவு செய்தன. கள்ளச்சாராய வணிகத்தின் பின்னால் உள்ள முக்கியப் புள்ளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது குறித்தும் கூட்டணிக் கட்சிகள் கேள்விகளை எழுப்பின.
இந்நிலையில், தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழ்நாடு மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவை அமைச்சர் முத்துசாமி பேரவையில் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது; கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் அதை தயாரிப்பது விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, 10 லட்சம் ரூபாய் வரை தண்டனை தொகையை உயர்த்தி கடுமையான தண்டனைகளையும் விதிப்பதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா:
தமிழ்நாட்டில் இருந்து கள்ளச்சாராயத்தின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிப்பது அவசியம். கள்ளச்சாரயத்துடன் கலக்கப்படக்கூடிய குடி தன்மை இழந்த எரிசாராயம், மெத்தனால் போன்ற தடை செய்யப்பட்ட மதுபானங்களால் விலை மதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுவதால் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தண்டனை அதிகரிப்பது அவசியம் என்று அரசு கருதுகிறது.
இதற்காக கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தில் சிறைத் தண்டனையின் கால அளவை அதிகரித்தும், தண்டனைத் தொகையினுடைய அளவையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மதியை மயக்கக்கூடிய மருந்தினை தயாரிக்க கொண்டு செல்வற்கும், வைத்திருப்பதற்கும் நுகர்வுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அந்த மதுவினை அருந்துவதால் மரணம் ஏற்பட்டால் ஆயுள் காலம் வரை கடுங்காவல் சிறைத் தண்டனையோடு, 10 லட்சம் ரூபாய் வரைக்கும் அபராத தண்டனை விதிக்க திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது தண்டனை பெற்றோர் ஜாமீன் கோர முடியாது, அவ்வாறு கட்டாயம் ஜாமீன் வேண்டும் என்றால் அரசு வழக்கறிஞரின் ஒப்புதல் அவசியம் ஆகும். குற்றங்களுக்கு பயன்படுத்தக்கூடிய அனைத்து அசையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்வதோடு, மது அருந்துவதற்கு பயன்படுத்தப்படும் உரிமை இல்லாத இடங்களை மூடி சீல் வைக்கவும், இந்த குற்றங்களை செய்யக்கூடிய நபர் எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்களை செய்வதிலிருந்து தடுப்பதற்கு கணிசமான தொகைக்கு பிணைமுறிவிணை நிறைவேற்றுவதற்கும் நிர்வாகத்துறை நடுவருக்கு அதிகாரம் அளிக்க வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.
இதுபோன்று குற்றங்களைச் செய்து தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட ஒருவரை அந்தப் பகுதியில் இருந்தே நீக்கம் செய்வதற்கு மதுவிலக்கு அதிகாரி அல்லது புலனாய்வு அதிகாரியால் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்வதற்கும் சட்டத் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் இதில் ஈடுபடக்கூடிய நபர்கள், பயன்படுத்தக்கூடிய பொருள்கள், இடம் என அனைத்தையும் வரைமுறைப்படுத்தி அதற்கான தண்டனைகளையும், அபராதத் தொகைகளையும் அதிகரித்து மற்றும் அதிகாரிகளுக்கான அதிகாரம் வழங்குவதற்கான வழிவகை செய்த சட்டத் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது என சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தமிழ்நாடு மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more | மக்களே..!! இந்த தவறை செய்தால் உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் மேல கஷ்டம் வரும்..!!