ED அதிரடி...! அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்...!
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் திமுக அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
திமுக அமைச்சரவையில் மீன்வளத் துறை அமைச்சராக இருக்கும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் 2009-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார். இந்நிலையில், 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த 2006-ல் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வருமானத்துக்கு அதிகமாக சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான சொத்து சேர்த்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததற்கான முகாந்திரம் இருந்ததால், இந்த வழக்கு அமலாக்கத் துறைக்கு மாற்றப்பட்டது. அமலாக்கத் துறை விசாரணை நடத்தி, 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 160 ஏக்கர் நிலம் உட்பட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி மதிப்பிலான 18 சொத்துகளை முடக்கியது.
இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்பொழுது தூத்துக்குடி, மதுரை, சென்னையில் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை முடக்கி தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.